சென்னை:
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று பெரும்பாலான இடங்களிலும் நாளை (18ந்தேதி) ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரியில் இன்றும், நாளையும் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கூடலூர் பஜார், பந்தலூரில் தலா 10 செ.மீ மழையும், கிருஷ்ணகிரியில் 8 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.