தாம்பரம்: சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதில் உள்ள 480 பேருக்கு மறைமலை நகராட்சிக்கு உட்பட்ட தைலாபுரம் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் மாநராட்சி அலுவலகத்தில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் திட்டபணிகள் குறித்த ஆய்வு அமைச்சர் தா.மோ.அன்பரன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹிதேஷ்குமார் ஐ.ஏ.எஸ்., நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ். ஆகியோர் திட்டங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறும்போது, ”செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு குடியமரத்தபடாமல் உள்ளனர். அவர்களைக் குடியமர்த்தபடுவதற்காக ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. 3 மாதத்திற்குள் அவர்களுக்கு இந்த வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஏரி ஆக்கிரமிப்பாளர் வீடுகளை ஒதுக்குவதில் உள்ள சில சிக்கல்களும் விரைவில் சரிசெய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வருமானம் உள்ள ஏழை, எளியோருக்கு வீடுகள் ஒதுக்கப்படும்
சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதில் உள்ள 480 பேருக்கு மறைமலை நகராட்சிக்குபட்ட தைலாபுரம் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்படும்” என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.