சென்னை: சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்நிலைச் சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தலைமைச் செயலகத்தில் நேற்று, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்நிலைச் சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம், இந்திய கடற்படைப் பிரதிநிதிகள் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த திட்டத்தின்படி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.565 கிலோமீட்டர் நீளத்துக்கு, ரூ.5,855 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு உயர்நிலைச் சாலை அமைக்கப்படும்.
சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரையிலான முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும். அதற்காக 13 இடங்களில் வாகனங்கள் ஏறும், இறங்கும் சாய் தளங்களுடன் இச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இரண்டாவது அடுக்கு, துறைமுகம் முதல் மதுராயல் வரை, இருபுறமும் பயணிக்கும் கனரக வாகனப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு காரணங்களால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இப்பணி, தமிழக அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைத் துறைச் செயலர் கே.கோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.