ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் இருக்க வேண்டும்: வனத்துறையினர் எச்சரிக்கை

திருப்பத்தூர்: தொடர் மழை காரணமாக ஜலகம்பாறை நீர் வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் இருக்க வேண்டும், யாரும் வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்துார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் புல்லூர் தடுப்பணை திங்கள்கிழமை நிரம்பியது. அதேபோல வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆம்பூர், துத்திப்பட்டு, வடபுதுப்பட்டு, நாட்றாம்பள்ளி, ஏலகிரி மலைப்பகுதி, ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

ஆம்பூரை ஒட்டியுள்ள வனப்பகுதியில் உள்ள கானாற்றுப் பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் வழக்கம் போல் இருந்தது. மாலை 3 மணிக்கு மேல் ஆம்பூர், வடபுதுப்பட்டு, வாணியம்பாடி சுற்று வட்டாரப்பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டியது. இந்நிலையில், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைப் பகுதியிலும், மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஜலகம்பாறை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து செவ்வாய்கிழமை காலை முதல் அதிகரித்து வருகிறது.

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபு கூறியதாவது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் ஆண்டு முழுவதும் சீரான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குழந்தைகளுடன் வருகின்றனர்.

குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு வருவது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் வரத்தும் அதிகரித்து வருகிறது. ஏலகிரி மலைக்கு சுற்றுலா வரும் பயணிகள் மலையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கும் சென்று அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் நீர் வீழ்ச்சி கண்டு ரசிக்கின்றனர். நீர்வீழ்ச்சி பகுதியில் ஆபத்து நேரிடாமல் இருக்க அங்கு வனத்துறையினர் எப்போதும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், திருப்பத்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியிலும் செவ்வாய்கிழமை முதல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதனால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் அருவி பகுதிக்கு குளிக்க செல்ல வேண்டும். அத்துமீறி வனத்திற்குள் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றார்.

செவ்வாய்கிழமை காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் வருமாறு: ஆம்பூர் 15.6 மி.மீ., வடபுதுப்பட்டு 26.40 மி.மீ., ஆலங்காயம் 38 மி.மீ., வாணியம்பாடி 7 மி.மீ., நாட்றாம்பள்ளி 26 மி.மீ., கேத்தாண்டப்பட்டி 23 மி.மீ., திருப்பத்தூர் 15.70 மி.மீ., என மொத்தம் 151.70 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.