ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி – என்ன காரணம்?

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் தற்போது ட்விட்டரில் திடீரென உலக அளவில் டிரெண்டாகி வருகிறது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்து அண்மையில் வெளியாகிய திரைப்படம் ‘பீஸ்ட்’. முதலில் திரையரங்குகளில் ரிலீஸான இந்த திரைப்படம், இப்போது நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களிலும் வெளியாகியுள்ளது. ஓடிடியில் இந்தி, தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ‘பீஸ்ட்’ டப் செய்யப்பட்டுள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து இத்திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

image

இந்நிலையில், நேற்று இரவு முதலாக ‘பீஸ்ட்’ திரைப்படம் சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது. ஓய்வுப்பெற்ற இந்திய விமானப் படை விமானி சிவராமன் சஜ்ஜன் வெளியிட்ட ட்வீட்டே இந்த டிரெண்டிங்குக்கு காரணமாக அமைந்துள்ளது. ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் ‘ரா’ உளவுத் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய், கிளைமாக்ஸில் தன்னந்தனியாக பாகிஸ்தானுக்குள் ஜெட் விமானத்தில் சென்று தீவிரவாதிகளின் தலைவனை பிடித்து வருவார். அப்போது பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்தும் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து அவர் லாவகமாக தப்பித்து வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இதனிடையே, இந்த சீனை வீடியோவாக ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் கேப்டன் சிவராமன் சஜ்ஜன், “இதில் எனக்கு ஏராளமான கேள்விகள் இருக்கின்றன…” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் பதிவைதான் தற்போது நெட்டீசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். முதலில் இந்திய அளவில் டிரெண்டான இந்த ட்வீட், ஒருகட்டத்துக்கு மேலே சர்வதேச டிரெண்டாக மாறிப்போனது.

பொதுவாக, போர் விமானங்களை இயக்கும் பயணிகள் ஆக்சிஜன் மாஸ்க்கும், ஹெல்மெட்டும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ஏனெனில் ஜெட் விமானம் செல்லும் வேகத்தில் நமக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். மேலும் காற்றின் வேகத்திலும், ஜெட்டின் ஒலியிலும் காது சவ்வுகள் கிழிந்து விடும். இதன் காரணமாகவே ஆக்சிஜன் மாஸ்க்கையும், ஹெல்மெட்டையும் விமானிகள் அணிந்திருப்பார்கள். ஆனால், குறிப்பிட்ட சீனில் விஜய் மாஸ்க்கும் அணிந்திருக்க மாட்டார். ஹெல்மெட்டையும் அணிந்திருக்க மாட்டார். நிஜத்தில் இது சாத்தியமே இல்லாதது.

அதேபோல, எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பித்து வரும் விஜய்யை பார்த்து, எதிரே மற்றொரு ஜெட்டில் வரும் பெண் விமானி சல்யூட் அடிப்பார். அதற்கு விஜய்யும் பதில் சல்யூட் அடிப்பார். சாதாரணமாக ஒரு ஜெட் விமானம் மணிக்கு 1,500 கி.மீ. வேகத்தில் பறக்கும். அந்த வேகத்தில் செல்லும் போது எதிரே வரும் ஜெட் விமானம் உள்ளிட்ட எந்தவொரு விமானமும் மைக்ரோ வினாடிகளில் கடந்து சென்றுவிடும்.

image

அப்படி இருக்கும் போது, எதிரே வரும் விமானிக்கு சல்யூட் அடிப்பது எல்லாம் ரொம்ப ஓவர் என உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நெட்டீசன்கள் கலாய்த்து வருகின்றனர். “ஒரு திரைப்படத்தில் லாஜிக் மீறல் இருக்கலாம்; தவறில்லை. ஆனால் லாஜிக்கே இல்லாமல் இருப்பதுதான் தவறு” எனவும் நெட்டீசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் பல வீடியோ மீம்ஸ்களையும் போட்டு பீஸ்ட் படத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.