எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு:
கடந்த சில தினங்களுக்கு முன்பாக சேலத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பேரிடரில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்துவரி உயர்வு அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் வருவாயை அதிகரிப்பதற்கு திமுக அரசிடம் எந்த செயல் திட்டமும் கிடையாது. இதனால்தான் விரைவில், பேருந்து கட்டணத்தையும், மின்சார கட்டணத்தையும் அரசு உயர்த்தவுள்ளது” என்று பேசியிருந்தார்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்த ஆட்சியில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. கடந்தாண்டை விட நிதிப்பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. குறை சொல்லவேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் எதையாவது சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்த பொருள் விலையும் ஏறவில்லையா? பேருந்து கட்டண உயர்வைப் பொறுத்தவரைப் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் முதல்வர் முடிவெடுப்பர்” என்று பேசியிருந்தார்.
கட்டண உயர்வு:
அமைச்சர் நேரு `சூழலுக்கு ஏற்ப சிலவற்றின் கட்டணங்களை உயர்த்தவேண்டிய நிலை உள்ளது’ என்று பேசியதும், தமிழகத்தில் பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயரப்போகிறது என்று பெரும் சர்ச்சை கிளம்பியது. இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில்தான், பேருந்து கட்டண உயர்வு சர்ச்சை குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்துத் தொடர்ந்து பல்வேறு வதந்திகள் உலவி வருகிறது. இரண்டு மாநிலங்களுக்குக் கிடையே பேருந்து போக்குவரத்து ஒப்பந்தம் போடும்போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்துக்கு வரும் மற்ற மாநில பேருந்தின் கட்டணமும் உயர்த்தவேண்டும் என்பது என்பது விதி. கேரளா மற்றும் ஆந்திராவில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், அந்த மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக போக்குவரத்துக் கழக பேருந்துகள் அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
இந்த கட்டண உயர்வைத் தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து பேருந்து கட்டணங்களுடன் குழப்பிக்கொண்டு தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தை பெரும் நிதி நெருக்கடியில் கடந்த அதிமுக அரசு விட்டுச் சென்றுள்ளது. இருந்தபோதிலும், ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில்தான் அரசுப் போக்குவரத்துக் கழகம் செயல்படவேண்டும் என்று முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்த ஓராண்டில் மட்டும் பெண்கள் நகரப் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டத்தில் 112 கோடி பயணம் நடைபெற்றுள்ளது. அதற்கான நிதியையும் முதல்வர்தான் வழங்கிவருகிறார். ஏழை எளிய மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும், எந்த கட்டண உயர்வும் செய்யாமல்தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பேருந்தை இயக்கி வருகிறது. கட்டண உயர்வு அட்டவணை தயார் என்று தவறான வதந்திகளைப் பரப்பவேண்டாம்” என பல்வேறு சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேலிடம் பேசினோம். “கடந்த அதிமுக ஆட்சியில் சொத்துவரியை உயர்த்துவது குறித்த ஒரு ஆலோசனைக் கூட்டம் அறிவித்த நேரத்திலேயே அதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆனால், இந்த திமுக அரசு எந்த ஆலோசனைக் கூட்டமும் நடத்தாமல், சொத்துவரி உயர்வு என்று இரவில் ஆணையை வெளியிட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட, பணிக்கும் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, மடிக்கணினி என்று பல்வேறு திட்டங்களை நிறுத்தியுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “அதிமுக அரசில் கொண்டுவரப்பட்ட மக்களுக்குப் பயன்படக்கூடிய அனைத்து திட்டங்களையும் இந்த அரசு நிறுத்தியுள்ளது. இப்போது, சொத்துவரி உயர்வு, கட்டணம் உயர்வு என்று மக்களை பெரும் கஷ்டத்தில் தள்ளிவருகிறது ஆளும் திமுக அரசு. இப்படி இந்த திட்டங்கள் மூலமாக வரும் வருவாய் கொண்டுதான் அவர்களின் வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றத் திட்டம் செய்துள்ளார்கள். தமிழக முதல்வர், எங்களுக்கு ஒட்டு போடாத மக்களும் ஏன் வாக்கு செலுத்தவில்லை என்று வருத்தப்படும் அளவுக்கு இந்த ஆட்சி உள்ளது என்று சொல்கின்றார். உண்மையில், திமுகவுக்கு வாக்கு செலுத்தியவர்கள்கூட ஏன் வாக்கு செலுத்தினோம் என்று வருத்தத்தில் உள்ளனர் என்பதே உண்மை நிலவரம்” என்று பேசினார்.
இது குறித்து திமுக செய்தி தொடர்பாளர், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “திமுகவின் ஒரு வருட ஆட்சி முடிவில் பல்வேறு ஊடகங்களும் மக்களிடையே இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்று கருத்துக் கேட்டார்கள். உண்மையில் பெரும்பான்மையான மக்கள் இந்த ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று கருத்து கூறியதை நம்மால் பார்க்க முடிந்தது. சொத்து வரி உயர்வு விஷயத்தில், பெரும்பான்மையான ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த அளவும் பாதிப்பு கூட இல்லாத வகையில் தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் தேவையில்லாத வதந்தி பரப்பப்படுவதை அமைச்சர் மிகத் தெளிவாகப் பேசியுள்ளார். மக்கள் இதனை நன்றாகப் புரிந்துகொண்டார்கள். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள்தான் பெரிதுபடுத்தி அரசியல் செய்துவருகிறது. திமுக சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவருகிறது. சொல்லாத பல நலத்திட்டங்களையும் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும்” என்று பேசினார்.
பேருந்து மற்றும் மின்சார கட்டண உயர்வு விவகாரத்தைப் பொறுத்தவரை, அரசு தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பதுதான் இன்றைய நிலவரம்!