புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்ட பாஜக ஊடக பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், தாஜ்மகால் வளாகத்தில் மூடப்பட்டு கிடக்கும் 20 அறைகளை திறக்க உத்தரவிட கோரி கடந்த 4-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்து கடவுள்களின் சிலை இருக்க வாய்ப்பு உள்ளதால் அந்த அறைகளை திறந்து சோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு கடந்த 12-ம் தேதி நீதிபதிகள் டி.கே. உபாத்யாய் மற்றும் சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) தனது பருவ இதழில் தாஜ்மகால் அறைகளின் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்த அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை என்று ஏஎஸ்ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழுதடைந்த நிலையில் உள்ள அந்த அறைகளை பராமரிக்கும் பணி நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.