சென்னை: சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தினசரி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் அதிகாரிகளுடன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சில நாட்களுக்கு முன்பு ஆய்வு நடத்தினார். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் மேற்கொண்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், ஆய்வுப் பணி மேற்கொள்ளும்போது ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தினசரி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம்:
> கழிப்பறைகளை, வெளியாட்கள் ஆக்கரிமிப்பு செய்யாமல், சுகாதாரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
> ஆக்கிரமித்து கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> இரவு காப்பாகங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் ஆய்வு செய்து முறைகேடு நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
> வாகன பணிமனைகளில் காலை 6:30 மணிக்கு ஆய்வு செய்து பெட்ரோல், டீசல் திருடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
> பூங்காக்கள் பராமரிப்பின்றி இருந்தால், ஒப்பந்தாரருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
> கடற்கரை மற்றும் தி.நகர் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
> அலுவலகங்களில் காலை, பிற்பகல், மாலை நேரங்களில் திடீர் ஆய்வு செய்து, முறையாக வருகை பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
> வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டவர்கள் அலுவலகத்தில் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> இது தொடர்பான தினசரி ஆய்வு பணிகளை தினசரி மாலையில், அறிக்கையாக அளிக்க வேண்டும்.
இந்த உத்தரவுகளை சென்னை மாநகராட்சி ஆணையர் வழங்கியுள்ளார்.