திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே உள்ள கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேசிங்கு – தேவகி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில், மூத்த மகன் ஜெகதீஷன் என்பவர் இராணுவ வீரராக பணியாற்றி வந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இராணுவத்திலிருந்து வெளியேறியவர், தனது கிராமத்திலேயே வசித்து வந்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். தேசிங்கு – தேவகி தம்பதியினரின் இரண்டாவது மகன், கோதண்டராமன். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்த அண்ணன், தம்பி இருவரும் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். விவசாயப் பணிகள் தொடர்பாக அண்ணன், தம்பி இருவரிடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுமாம். அதனால், தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, தாய் தேவகியுடன் கோதண்டராமன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், தாயுடன் சொந்த ஊருக்கு மீண்டும் வந்த கோதண்டராமன்… தான் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும், அதனால் பாகப்பிரிவினை செய்துக்கொள்ளலாம் என அண்ணன் ஜெகதீஷனிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அண்ணன், தம்பி இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டதாம். இந்த நிலையில், நேற்றைய (16.05.2022) தினம் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே நிலம் பங்கீடு தொடர்பாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், முன்னாள் இராணுவ வீரரான ஜெகதீஷன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து… தம்பி கோதண்டராமனை நோக்கி சுட்டார். இந்தச் சம்பவத்தில், மார்பில் தோட்டா துளைத்து கோதண்டராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் ஜெகதீஷன் அவர் மனைவியுடன் அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறார்.
இது குறித்து கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குவந்த டி.எஸ்.பி குமார் தலைமையிலான சேத்துப்பட்டு போலீஸார் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், கோதண்டராமனின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக எடுத்துச்செல்ல முயன்றபோது, உறவினர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பின்னர், சமரசம் பேசப்பட்டு கோதண்டராமனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள், தம்பியை சுட்டுக்கொன்ற அண்ணன் ஜெகதீஷனை தேடி வந்தனர். இந்த நிலையில், போளுர் அருகே ஜெகதீஷன் இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், அங்கு சென்ற காவல்துறையினர் அவரைக் கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலத்தை பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், உடன் பிறந்த தம்பியையே அண்ணன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருக்கும் சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.