திருவனந்தபுரம்:
இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பொழிவு கிடைக்கும்.
தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரம் கேரளாவில் தொடங்கும். அதன்பின்பு படிப்படியாக கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பரவி மழை பொழிவை அளிக்கும்.
இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்குகிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வரும்.
அதன்படி அந்தமான் தீவுகளில் தான் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படும். கடந்த சில நாட்களாக இதற்கான அறிகுறிகள் அந்தமான் கடல் பகுதியில் தென்பட்டது.
இதையடுத்து இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தினர் கூறி இருந்தனர்.
தற்போது அந்தமான் தீவுகளில் பருவ மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதையடுத்து வருகிற 27ந் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வழக்கமாக ஜூன் 1ந் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒருவாரத்திற்கு முன்பே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் கணித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். தற்போது பருவ மழை முன்கூட்டியே தொடங்குவதால் குமரி மாவட்டம் உள்பட நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு ஒரு சில நாட்கள் மட்டுமே வெயில் வாட்டியது. அதன்பின்பு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழையும் முன்கூட்டியே தொடங்க உள்ளதால் அணைகள் நிரம்பவும் வாய்ப்பு உள்ளது.