இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலையில் உயிரிழந்த ஈகையினரின் நினைவாக தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு முதன்முறையாக இன்று சசிகலா நடராஜன் வருகை தந்து தமிழ் ஈகையினர்க்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
தமிழீழத்தில் கடந்த 2009-ம் ஆண்டு மே 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் சுமார் ஒன்னரை லட்சம் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தமிழீழத்தில் கொல்லப்பட்ட, தமிழீழத்துக்காக உயிர்விட்ட போராளிகள் மற்றும் பொதுமக்களின் தியாகத்தைப் போற்றும் வகையில்உலகத் தமிழர் பேரமைப்பு சார்பாக தஞ்சையை அடுத்துள்ள விளார் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 1.75 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட ‘முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’ திட்டமிடப்பட்டிருந்த நாளுக்கு இரு நாட்களுக்கு முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த நினைவு முற்றம் கட்டுவதற்கு தேவையான நிலத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவரும், மறைந்த தமிழ் செயற்பாட்டாளர் மற்றும் ‘புதிய பார்வை’ மாத இதழின் ஆசிரியருமான எம்.நடராஜன் வழங்கியிருந்தார்
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு சசிகலா நடராஜன் இன்று முதல் முறையாக வருகை தந்து தமிழ் ஈகையர்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வின்போது, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களைச் சந்தித்து, அவருடன் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியத்தைப் பார்வையிட்டு, தியாகிகள் வரலாறைப் படித்து தெரிந்து கொண்டார் சசிகலா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“