புனே :
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் பாரதிய வித்யாபீட பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
தொழில் முனைவோரின் புதிய யோசனைக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே கட்டுப்பாடுகளை கடந்து சிந்தியுங்கள். ஏற்கனவே உள்ள தகர்ந்துபோன பாதையில் பயணிக்க வேண்டாம். இப்படி நான் பேச காரணம் நீங்கள் நல்ல வேலையில் சேரவேண்டும் என்பதையோ அல்லது ஒரு அரசு அதிகாரியாக ஆவதையோ நான் விரும்பவில்லை என்பதல்ல.
ஆனால் ஒரு வசதியான, பாதுகாப்பான வேலையில் அமர்ந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமில்லாதது. வாழ்க்கையில் புதிய பரிசோதனைகளை செய்து பாருங்கள், இதற்கான நேரம் இதுதான். நீங்கள் அதை தாராளமாக செய்து பார்க்கலாம்.
தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டு ஆகும். தான் பெற்ற கல்வி அறிவை இந்த சமுதாயத்திற்கு திரும்ப கொடுப்பதும், நாட்டை கட்டி எழுப்புவதும் நல்ல கல்வியை பெற்றவர்களின் கூட்டு பொறுப்பாகும்.
உங்களில் ஒருவர் தீவிர அரசியல்வாதியாக வருவதை நான் பார்க்க விரும்புகிறேன். நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வராதவரை, அரசியலை மாற்ற முடியாது. அரசியல் தான் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் கருவியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.