டெங்கு நோய் பரவலைத்தடுக்க கட்டுப்படுத்தும் வகையில் நாளை (18) முதல் மே 24 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
எமது செய்தி பிரிவுக்கு இன்று (17) இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இத்திட்டத்தின் மூலம் இனங்காணப்பட்ட அதிக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இராணுவம், பொலிஸார் மற்றும் ஏனைய சுகாதார பணியாளர்களின் உதவியுடன் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக பொதுமக்களின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் 20,536 பேர் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும், அதில் 2,813 பேர் மே மாதத்தில் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பதிவாகிய நோயாளர்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 43% க்கும் அதிகமாகும். காலி, திருகோணமலை, யாழ்ப்பாணம், கண்டி, மட்டக்களப்பு, களுத்துறை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அதிகமான நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போது நாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக எதிர்காலத்தில் இந்நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதனால், சுற்றுச் சூழலில் நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து சுத்தம் செய்வது இதன் நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஒருtருக்கு 24 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் இருந்தால் டெங்கு தொற்று உள்ளதா? என்பதை உடனடியாக வைத்திய பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு கண்டறியப்படும் சந்தர்ப்பத்தில் தாமதிக்காமல் டெங்கு தொற்றுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதன் மூலம் இந்நோயினால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டெங்கு நோய் பரவுவதற்கு முன்னர் அதனை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும் என்று டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர மேலும் வலியுறுத்தினார்.