`டான்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக யதார்த்தமாக நடித்திருந்தார், ஆதிரா பாண்டிலட்சுமி. `நவீன கூத்துப்பட்டறை’ என்கிற பெயரில் பல நடிகர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆதிராவை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்து பேசினோம்.
“நேற்றிலிருந்து பாரமாக இருக்கு. பலர் அழுதுட்டே போன் பண்றாங்க. பசங்க பலர் மேம் அம்மாகிட்ட பேசி ரொம்ப நாளாச்சு. உங்ககிட்ட பேசிட்டு அவங்ககிட்ட பேசணும்னு இருக்கேன்னு சொன்னாங்க. உறவுங்கிறது மிகப்பெரிய கட்டமைப்பு. உறவுகளை நிச்சயம் மிஸ் பண்ணக் கூடாது.
சிவகார்த்திகேயனுடன் ஏற்கனவே ஒர்க் பண்ணியிருக்கேன். ‘கனா’ படத்தில் நடித்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு நாங்கதான் ஆக்டிங் கிளாஸ் எடுத்தோம். அப்புறம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் நடிச்சிருந்தேன். அப்படி இந்தப் பட வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கலாம். இல்லைன்னா ‘பாவக்கதைகள்’ பார்த்துட்டு கூப்பிட்டிருக்கலாம். நான், சிவா, கனி சார் எங்க மூணு பேருக்குள்ளே ஒரு ஒற்றுமை இருக்கு… எங்க மூணு பேருக்குமே அப்பா இல்ல. அந்த வெற்றிடம்தான் எங்களை இணைச்சிருக்குன்னு நினைக்கிறேன். எங்க உணர்வுகள் எல்லாமே உண்மைன்னுதான் எனக்கு தோணுது. அதனாலதான் எங்களையும் மீறி வெடிச்சு நடிக்க முடிஞ்சது.
என்னுடைய அப்பாவை நினைச்சுகிட்டு அந்த வலியோடும், அந்த கனத்தோடும்தான் நடிச்சேன். எல்லா குடும்பத்திலும் அம்மா என்பவங்க அப்பாவுக்கும், பிள்ளைக்கும் நடுவில் பாலமாகதான் இருப்பாங்க. அந்த யதார்த்தத்தைத்தான் பதிவு பண்ணியிருக்கோம். சிங்கிள் டேக்ல நான் நடிச்சு முடிச்சதும் ஸ்பாட்ல சிபி சாருக்கு பேச்சே வரல. ரீடேக் கூட வேண்டாம்னு சொல்லிட்டார்.
இதுல குரல்தான் நடிக்கணும். வேதனையை உள்ளே கொண்டு போயிட்டு என் குரல் வழி வலியைக் கடத்தணும் என்கிற ரெஸ்பான்ஸிபிலிட்டியுடன் டப்பிங்கில் கவனமா இருந்தேன். நானும் கனியும் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ். நல்லா கலகலன்னு பேசிட்டு இருப்பாரு. ஆனா, இந்தப் படம் முழுக்கவும் இறுக்கமாகத்தான் இருந்தார். அவருடைய அப்பா ஞாபகம் வந்ததுங்கிறதை உணர முடிஞ்சது. சிவா சாருடைய நிஜமான அப்பாவாகத்தான் செட்ல அவர் இருந்தார்.
இன்னும் படம் குறித்த இன்னும் பல விஷயங்களை ஆதிரா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்!