கடலூர், செம்மண்டலத்தில் இயங்கிவருகிறது கந்தசாமி நாயுடு மகளிர் கலை அறிவியல் கல்லூரி. அந்த கல்லூரியின் ஊழியர் ஒருவர் இன்று காலை கல்லூரிக்கு சென்றபோது, மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதையடுத்து கல்லூரியின் நிர்வாகத்துக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்திருக்கிறார். உடனே அங்கு விரைந்த புதுநகர் போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அந்த மாணவி விழுப்புரம் மாவட்டம், சின்னபாபுசமுத்திரத்தைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரது மகள் தனலட்சுமி என்பதும், அந்த கல்லூரிக்கு அருகிலிருக்கும் அரசு விடுதியில் தங்கி வணிகவியல் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறைக்காக வீட்டுக்கு சென்ற மாணவி தனலட்சுமியை நேற்று 16-ம் தேதி மாலை விடுதியில் விட்டிருக்கிறார் அவரது தந்தை நாகலிங்கம். இந்நிலையில்தான் இன்று காலை தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார் மாணவி தனலட்சுமி.
அந்த இடத்தில் தற்கொலை கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்திருந்தார். போலீஸார் கைப்பற்றிய அந்த கடிதம் தனலட்சுமியின் தம்பி சக்திக்கு எழுதப்பட்டிருக்கிறது. அதில், “நல்லா படிடா சக்தி. அப்பா அம்மாவ நல்லா பாத்துக்கோ. தினமும் நவீனுக்கும் விஷாலுக்கும் பாடம் சொல்லித்தா. சண்டை போடாதீங்க. சீக்கிரமாக வீடு கட்டிருங்க. என்னுடைய வாட்ச்சை நிஷாந்திக்கு குடு. யாரையும் நம்பாதே. போலியான உலகம் லவ் யூ டா சக்தி. அய்யாவுக்கும், அரிகோவிந்த் அப்பாவுக்கும் அம்மாவை சாப்பாடு தர சொல்லு. சண்டை வாங்க வேண்டாம்.
அப்பாவுக்கு அதிகமா செலவு கொடுக்காத. அம்மாவை ஆடு மாடெல்லாம் வித்திட சொல்லு. கஷ்டப்படுது இந்த சின்ன வயசுல. நல்லா படிடா. எனக்கு நான் ஃபெயில் ஆகிவிடுவேனோன்னு பயமா இருக்கு. அதான் போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். அப்பா எனக்கு ரொம்ப உயிர். அப்பா அம்மா லவ் யூ. சப்போஸ் நான் செத்துட்டா என்னோட போலீஸ் யூனிஃபார்ம் (NCC) போட்டு விடுங்க. ஹாஸ்டல்ல இருந்து என்னோட பொருள்களை எல்லாம் எடுத்துட்டு போங்க. என்னோட அக்கவுண்ட்ல 6,000 ரூபா இருக்கும். அதுல ஒரு வாட்ச் வாங்கிக்கோ.
நிஷாந்தியை நல்லா பாத்துக்கோ. அவளுக்கு டிரஸ் வாங்கி கொடு. அம்மாவ நல்லா பாத்துக்கோ. நீ பெரியவனா ஆனதுக்கப்புறம் அப்பா, அம்மாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசக்கூடாது சரியா? அக்கா உன் கூடவே இருப்பேன். நல்லா படிடா. தனு, வினியை நல்லா பாத்துக்கோ. என்னை மறந்துடுங்க. இந்த லெட்டரை படிச்சு முடிச்ச உடனே கிழிச்சு போட்டுடனும். லவ் யூ நல்லா சாப்பிடு. எந்த கெட்டப் பழக்கமும் வச்சுக்க கூடாது. அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே டா. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். விட்டு வெளியில காமிச்சிக்க மாட்டேன். பை டா செல்லம்” என்று முடித்திருக்கிறார்.
தகவலறிந்து கல்லூரிக்கு வந்த தனலட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முதல்வரின் அறைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுமுறை முடிந்து விடுதிக்கு வரும் போது தங்களது மகள் நன்றாகத்தான் இருந்தார் என்றும் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பும்படி இல்லை என்றும் வாதிட்டனர். அப்போது அவர்களை சமாதானப்படுத்திய போலீஸார், விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து மாணவி தனலட்சுமியின் உடலை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.