புதுடெல்லி: ‘நிலக்கரி ஊழல் தொடர்பாக மம்தா பானர்ஜியின் மருமகன், அவரது மனைவியிடம் டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளருமான அபிஷேக் பானர்ஜி, அவரது மனைவி ருஜிராவுக்கும் நிலக்கரி ஊழலில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த விசாரணைக்காக டெல்லி அலுவலகத்தில் ஆஜராகும்படி அபிஷேக் பானர்ஜி, ருஜிராவுக்கு அமலாக்கத்துறை 2 முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை. அதே நேரம், இந்த விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் அபிஷேக், ருஜிரா வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதிகள் யு.யு.லலித், ரவீந்தர்பட் மற்றும் சுதன்சூ துலியா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர்களை விசாரணைக்காக டெல்லிக்கு அழைக்கும் அமலாக்கத் துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அமலாக்கத் துறை விரும்பும் பட்சத்தில், 24 மணி நேரத்திற்கு முன்பாக சம்மன் அனுப்பி கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை இயக்குனரக அலுவலகத்துக்கு அழைத்து அவர்களிடம் விசாரிக்கலாம். இந்த விசாரணைக்கு மேற்கு வங்க அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’ என தெரிவித்தனர்.