புதுடெல்லி: நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜியின் மருமகன், மனைவியின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் குனுஸ்டோரியா மற்றும் கஜோரா பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் பல கோடி ரூபாய் நிலக்கரி ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி 2020 நவம்பர் மாதம், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் விதிகளின் கீழ் லாலா என்ற உள்ளூர் நிலக்கரி இயக்குநரான அனுப் மஜ்ஹி, முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் மீது வழக்குபதியப்பட்டன. இந்நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இயக்குனரகம் தாக்கல் செய்த மனுவில், ‘நிலக்கரி ஊழல் தொடர்பான விசாரணைக்கு அபிஷேக் பானர்ஜியுடைய மனைவி ருஜிரா பானர்ஜி ஒத்துழைக்கவில்லை’ என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜிக்கு எதிராக ஜாமீன் பெறக்கூடிய வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ெடல்லி அமலாக்கத்துறை முன் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும். அமலாக்கத்துறையின் சம்மன் மற்றும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருஜிரா ஆகியோரிடம் அமலாக்கத்துறை டெல்லியில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது. இருப்பினும் குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்க விரும்பும்பட்சத்தில் 24 மணி நேரத்திற்கு முன்னதாக சம்மன் கொடுக்க வேண்டும். அவர்களை கொல்கத்தா அமலாக்க துறை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கலாம். மேற்குவங்க மாநில அரசு, அமலாக்க இயக்குனரக அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.