புதுடெல்லி:
நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் சுமார் 2 லட்சம் விசைத்தறி நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நூல் விலை உயர்வால் ஜவுளி ரகங்களின் விலை உயர்ந்துள்ளதுடன், வணிகமும் பாதியாக சரிந்துள்ளது. இதனால் ஜவுளி வணிகர்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தில் ஈடுபடுவதாக வணிகர்கள் தெரிவித்தனர்.
ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நூல் விற்பனையை நீக்கவும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கவும் வலியுறுத்தி மத்திய-மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து கிளாக் மெர்சண்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகள் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளன.
கரூரில் இன்று இரண்டாவது நாளாக ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நூல் விலை உயர்வை கண்டித்து கருரில் 60-க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
திருப்பூரில் 2வது நாளாக நடைபெறும் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கடந்த 2 தினங்களில் மட்டும் 200 கோடி அளவில் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல் ஈரோட்டில் ஜவுளி நிறுவனங்கள் கடையடைப்பு காரணமாக ரூ.200 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கரூரில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் செயல்படாததால் 2 நாளில் 100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நூல் விலையை குறைக்க கோரி நடைபெறும் இந்த போராட்டத்தால் சுமார் 500 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பருத்தி, நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நாளை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் திமுக. எம்.பி. கனிமொழி தலைமையில் தமிழக எம்.பி.க்கள் நாளை சந்திக்க உள்ளனர்.
அனைத்து எம்.பி.க்களும், நெசவாளர்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என நேரில் வலியுறுத்த உள்ளனர்.