நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வரும் ஷோக்கள் தொடர்பாக ஊழியர்களுக்கு உடன்பாடு இல்லையென்றால், ஊழியர்கள் தாரளமாக பணியில் இருந்து வெளியேறிக்கொள்ளலாம் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் அதன் கலாச்சார வழிகாட்டுதல்களைப் புதுப்பித்து, “கலை வெளிப்பாடு” என்ற புதிய பகுதியை சேர்த்துள்ளது. இது, பார்வையாளர்களுக்கு எவ்வாறு படங்களையும், தொடர்களையும் வழங்குகிறது என்பதை விவரிக்கிறது.
இதுதொடர்பாக நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெட்ஃபிளிக்ஸ் குறிப்பிட்ட கலைஞர்கள் அல்லது குரல்களைத் தணிக்கை செய்வதை விட, பார்வையாளர்களுக்கு எது பொருத்தமானது என்பதைத் அவர்களே தீர்மானிக்க அனுமதிக்கிறது.
சில சமயங்களில், உங்களை புண்படுத்தும் பகுதிகளில் நீங்கள் பணியாற்ற நேரிடலாம். அந்த உள்ளடகத்தை ஏற்றுக்கொள்வது உங்களுக்கு கடினமாக இருந்தால், நெட்ஃபிளிக்ஸ் நீங்கள் பணியாற்றுவதற்கு சரியான இடம் கிடையாது. நீங்கள் தாரளமாக பணியில் இருந்து வெளியேறி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிறுவன கூற்றுப்படி, வருங்கால ஊழியர்கள் எங்கள் நிலையை புரிந்து அவர்களுக்கு நெட்பிளிக்ஸ் சரியான நிறுவனமா என்பது குறித்து சிறந்த முடிவுகளை எடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் செய்த நடவடிக்கை சரியானது என எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், குறைவான வளர்ச்சி மற்றும் உலகளாவிய பயனர் எண்ணிக்கை சரிவு காரணமாக, நெட்ஃபிளிக்ஸ் அதன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் விளம்பரங்களைக் கொண்டு வருவதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் உள்ளடக்கத்தில் விளம்பரங்களை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுதவிர, பாஸ்வேர்டு ஷேரிங்கை தடுப்பதற்கான திட்டத்தையும் விரைவில் அறிவிக்கவுள்ளது.
2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2 லட்சம் சந்தாதாரர்களின் இழப்பை கண்டது நெட்பிளிக்ஸ். அதன் காரணமாக பங்கு சந்தையில் 20 சதவீதம் வீழ்ச்சி கண்டது.