நெல்லை கல்குவாரியில் 3-வது நாளாக தொடரும் மீட்புப் பணிகள்: மேலும் ஒருவர் சடலமாக மீட்பு

நெல்லை: திருநெல்வேலி அருகே கல்குவாரியில் பாறைகள் நடுவே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் நேற்றிரவு (திங்கள் இரவு) லாரி க்ளீனர் முருகன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள காக்கைகுளம் செல்வக்குமார் மற்றும் ஊருடையான் குடியிருப்பு ராஜேந்திரன் ஆகிய எஞ்சிய இருவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நடந்தது என்ன? திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் 350 அடி ஆழத்தில் வெடித்து உடைக்கப்பட்ட பாறைகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் சனிக்கிழமை நள்ளிரவில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ராட்சத பாறை சரிந்து விழுந்ததில், நாங்குநேரி காக்கைகுளம் லாரி ஓட்டுநர் செல்வகுமார்(30), தச்சநல்லூர் ஊருடையார்புரம் லாரி ஓட்டுநர் ராஜேந்திரன்(35), இடையன்குளம் பொக்லைன் ஓட்டுநர் செல்வம் (27), ஆயர்குளம் லாரி கிளீனர் முருகன் (23),விட்டிலாபுரம் முருகன் (40), நாட்டார்குளம் விஜய் (27) ஆகியோர் சிக்கினர்.

அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். விட்டிலாபுரம் முருகன், நாட்டார்குளம் விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். 17 மணிநேரப் போராட்டத்துக்குப் பின்பு மீட்கப்பட்ட இடையன்குளம் செல்வம், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புகுழுவைச் சேர்ந்த 30 பேர் அடைமிதிப்பான்குளம் வந்தனர்.

திங்கள்கிழமை அதிகாலையில் இருந்து அவர்கள் இரு பிரிவாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணி தொடங்கும்போதே, மேலும் பாறைகள் இடிந்துவிழுந்தன. அவற்றை அகற்றி எஞ்சியவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு ஆயர்குளம் லாரி கிளீனர் முருகன் (23) சடலம் மீட்கப்பட்டார். இதனால் இந்த விபத்தில் இதுவரை பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், காக்கைகுளம் செல்வக்குமார் மற்றும் ஊருடையான் குடியிருப்பு ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.