நவீன உலகிற்காக நிறுவனங்களின் எதிர்கால தயார்படுத்தல் என்ற தலைப்பில் தொழில்நுட்ப நிறுவனம் முதல் உற்பத்தி நிறுவனங்கள் வரை மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் ஸ்டார்ட் அப், சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் வரை தகவல்களை சேகரித்து வேலைவாய்ப்பு நிறுவனமான லீம்லீஸ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: சுமார் 76.78 சதவீத நிறுவனங்கள், பணியாளர்கள் பணி இடத்தை தேர்வு செய்வதற்கு வாய்ப்பை வழங்க தயாராக உள்ளன. 58.04 சதவீதம் நிறுவனங்கள், 2022ம் ஆண்டில் அனைத்து பணிகளும் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்புமென எண்ணுவதாக தெரிவித்துள்ளன. இதனுடன், 43.46 சதவீத மனிதவள மேம்பாட்டு தலைவர்கள், தங்களது பணியாளர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப விருப்பம் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
கோவிட் தொற்று பரவலால் வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் ஏறக்குறைய 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இன்னும் சில தினங்களில் அலுவலகத்தை திறப்பதில் தீவிரமாக உள்ளன.
ஆய்வறிக்கையின்படி, 40.77 சதவீத நிறுவனங்கள், தொலைதூர சூழலில், பணியாளர்கள் திறன் மேலாண்மை மற்றும் தனிப்பட்ட சவால்களை திறம்பட கையாண்டதை கண்டறிந்துள்ளன. 18.45 சதவீதம் நிறுவனங்கள் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதே நிலையில் தொடர வாய்ப்பு அளித்துள்ளன. மேலும் 18.05 சதவீதம் நிறுவனங்கள், முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ அலுவலகத்தை திறக்கவும் திட்டமிட்டுள்ளன.
பொருளாதார சூழல் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், பணியிடங்கள் தவறான பாதைக்கு இட்டு செல்வதை தவிர்க்க பணியாளர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவேற்கவும், அதே நேரத்தில் வணிகத்தின் நீடித்த வளர்ச்சியை தக்கவைக்க பணியாளர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமையை கருத்தில் கொள்ளும் சூழலில் இருப்பதாக கூறியுள்ளன.
எப்படி இருப்பினும், இரு பணியிடங்களையும் சமமாக சிறந்த முறையில் கையாண்டு, உற்பத்தி திறனை நிர்ணயித்து, பணியாளர்கள் ஊக்குவிப்பதை பொறுத்தே நிறுவனத்தின் நீண்ட கால நலன் அமையும்.