அதிபர் தேர்தலில் வெற்றி
பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவிக்கு மேக்ரான் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் மேக்ரானுக்கும், தீவிர வலதுசாரி வேட்பாளர் மரைன் லூ பென்னுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய சூழலில் மேக்ரான் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
அதை தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் தலைநகர் பிரான்சில் நடைபெற்ற விழாவில் மேக்ரான் பிரான்ஸ் அதிபராக 2-வது முறையாக பதவியேற்றார்.
பிரான்சில் கடந்த 20 ஆண்டுகளில் அதிபராக இருக்கும் ஒருவர் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
2-வது பெண் பிரதமர்
இந்த நிலையில் பிரான்சில் விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மந்திரிசபையில் மாற்றம் கொண்டுவர மேக்ரான் முடிவு செய்துள்ளார். இதற்கு ஏதுவாக பிரதமர் ஜீன் காஸ்ட்க்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஜீன் காஸ்ட்க்ஸ் நேற்று முன்தினம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் பிரான்சின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி என்பவரை அதிபர் மேக்ரான் நியமித்துள்ளார். பிரான்சில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு பிரான்ஸ் வரலாற்றில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள 2-வது பெண் எலிசபெத் போர்னி ஆவார்.
தொழில்நுட்ப வல்லுனர்
61 வயதான எலிசபெத் போர்னி கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஜீன் காஸ்ட்க்சின் மந்திரிசபையில் தொழிலாளர்துறை மந்திரியாக இருந்து வந்தார். இவருடைய பதவி காலத்தில் பிரான்சில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தொழிற்சங்கங்களுடன் விவேகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய ஒரு திறமையான தொழில்நுட்ப வல்லுனராகக் அறியப்படுபவர் ஆவார்.
அதிபா் மேக்ரானும், பிரதமா் எலிசபெத்தும் இணைந்து முழுமையான மந்திரிசபையை வரும் நாள்களில் அமைப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.