ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாரைக்கிணறு பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற ரவிச்சந்திரன்(வயது45). டிரைவரான இவர் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மேகலா (40). இவர்களுக்கு நர்மதா என்ற மகளும், தருண் (17) என்ற மகனும் உள்ளனர்.
ரவியும், மேகலாவும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரவி தற்போது சிங்களாந்தபுரம் அருகே உள்ள அவையம்பாளையத்தில் உள்ள அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
தருண் அவரது தாய் மேகலா உடன் வசித்து வருகிறார். மேலும் மெட்டாலா அருகே உள்ள ராசாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான்.
தருணுக்கு தேர்வு நடந்து வருகிறது. இன்று அவர் பள்ளிக்கு சென்று தேர்வு எழுத இருந்தார்.
இதனிடையே தாய், தந்தை இருவரும் பிரிந்து வாழ்வது தருணுக்கு மன அழுத்தத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த தருண் இன்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில் அவனது குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது மாணவன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர்.
தருண் தற்கொலை செய்யும் முன்பாக உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் எனது சாவிலாவது பெற்றோர் இணைந்து வாழவேண்டும் என்று உருக்கமாக எழுதி வைத்திருந்தார்.
மேலும் தருண் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அம்மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்க நல்லா இருக்கனும். அப்பா நீங்க இனிமேல் வீட்டில் சண்டை போடக்கூடாது. உங்களை குடிக்க வேண்டாம் என சொல்ல மாட்டேன். அளவா குடிங்க. குடிச்சிட்டு வந்தாலும் வீட்டுல சண்டை போடாமா இருக்கனும்.
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நான் உங்க மேல ரொம்ப பாசம் வச்சிருக்கேன். நீங்க நல்லா இருக்கனும். அப்பா உங்கள அடிச்சதுக்கு என்ன மன்னிச்சிடுங்க. அப்பா நான் உங்ககிட்ட எப்பவோ மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால் நீங்கள் எப்பவும் போதையில் இருந்ததுனால நான் உங்ககிட்ட கேக்கல. நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டாலும் நீங்க போதையில இருக்கிறதுனால நீங்க புரிஞ்சுக்க மாட்டிங்க. அப்பா எனக்காக நீங்க மாறனும். நான் போறதே உங்களுக்காக தான். என் இறப்பு உங்கள மாத்தும். இதை விட எனக்கு வேற வழி தெரியல. எனக்கு நம்ம குடும்பம் நல்லா இருக்கனும்.
எனக்கு வாழனும்கிற ஆசை எல்லாம் இல்ல. அப்பா நான் ஆசைப்பட்டது எனக்கு விபரம் தெரிஞ்ச வயசுல இருந்து உங்க பாசம் வேனும்னு ஆசைப்பட்டேன். நீங்க எப்போதாவது மாறுவிங்க என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனா நீங்க மாறுவதாக தெரியல. அதான் இந்த முடிவு எடுத்தேன். நீங்க இங்க தாத்தா வீட்டுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நீங்க சண்டை போட மாட்டேனு சொல்லி இருந்தா, நாங்க உங்க கூட வந்து இருப்போம்.
நான் இந்த முடிவு விருப்பப்பட்டுதான் எடுத்தேன். வேறு யாருடைய அறிவுரையோ அல்லது வற்புறுத்தல் படியோ நான் இந்த முடிவு எடுக்கவில்லை.
அப்பா நீங்க இறந்தா என்ன கொள்ளி வைக்க வரக்கூடாதுனு சொல்லிட்டிங்க. ஆனால் நான், உங்கள வரவேணானு சொல்ல மாட்டேன். என் இறப்புக்கு நீங்க வாங்கப்பா. எனக்கு, வந்து இறுதி சடங்கு செய்து வையுங்கள்.
அப்பா, அக்காள் செல்போனுக்கு ஒரு ஆடியோ நீங்க பேசுனது அனுப்பி இருப்பேன். அதை கேளுங்க. ஒரு அப்பா மனசு நொந்து சாபம் விட்டால் அந்த பையன் எப்படி நல்லா இருப்பான். குடிச்சிட்டு பேசினேன்னு சொல்லாதீங்க. உசுரும், வார்த்தையும் ஒன்னு.
அப்பா என்னை யாராவது பார்த்தாங்கனா அவங்க அப்பா மாறியே இருக்கானு சொல்லுவாங்க, அதை கேக்கும்போதெல்லாம் எவளோ சந்தோசமா இருக்கும். நாம நம்ம அப்பா மாதிரியே இருக்கனு நெனச்சு மனசுக்குள்ளே சந்தோசப்படுவேன்.
அம்மா அப்பா எனக்கு பள்ளிக்கூடத்துல கொடுத்த காசு என் பச்சை கலர் பைல்ல இருக்கும்.
இந்த கடிதத்தை அப்பாவிடம் வாசித்து காட்டுங்க. அக்கா, அப்பாவை நல்லா பாத்துக்கோங்க. நல்லா படிக்க வைங்க. அப்பா எனக்கு நீங்க மூணு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழ்ந்த போது அதுதான் எனக்கு சந்தோசம்.
அப்பா, அம்மாவை நீங்க கஷ்டப்படுத்தும் போது நான் எப்படிப்பா உங்களுக்கு சப்போட்டா பேசுவேன். எனக்கு நீங்க ரெண்டு பேரும் முக்கியம். எனக்கு உங்க மேலயும் பாசம் இருக்கு. அப்பா, அம்மா அப்பாவையும் அக்காவையும் நல்லா பார்த்துக்கோங்க, அப்பா, அம்மாவையும் அக்காவையும் நல்லா பாத்துக்கோங்க, .
பக்கத்தில் நான் சேமித்து வைத்த காசு இருக்கும். நீங்க தினமும் பஸ்சுக்கு கொடுத்தீங்களே அதனை சேமித்து வைத்தது அப்பா. நீங்க எவ்வளவு தான் குடித்துவிட்டு திட்டினாலும் சண்டை போட்டாலும் எனக்கு உங்க மேல வச்ச பாசம் குறையாது. ஏன்னா நீங்க என் அப்பா.
உங்க மேல எப்படிப்பா பாசம் இல்லாமல் போகும். நான் யார்கிட்டயும் மன்னிப்பு கேட்க மாட்டேன். என நான் செய்தது சரி. இதை விட்டா வேற வழி தெரியல. நம்ம குடும்பம் ஒன்று சேர்வதற்கு நீங்க மூணு பேரும் ஒண்ணா இருக்கணும் சேர்ந்து வாழனும்.
இதுதான் என் கடைசி ஆசை. அம்மா நான் உன்னை விட்டுட்டு போற என்று நினைக்காதே. நீ அழ கூடாது, அம்மா நீ தினமும் வேலைக்கு போயிட்டு வந்து கை கால் வலிக்குதுன்னு சொல்லும் போது மனசு அவ்வளவு வலிக்கும்மா.
வேலைக்கு போய் உன்ன உட்காரவைத்து சோறு போட ஆசை. அப்பா நான் வந்து இருந்தப்ப உங்க மனசு கஷ்டப்படும் படி நடந்து இருந்தால் என்னை மன்னிக்கவும். அம்மா, அப்பா, அக்கா நீங்க நல்லா இருக்கணும். நான் இறக்கிறது உங்களுக்காகத்தான். அம்மா நான் எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன். நீ அழுக கூடாது நீ அழுதா தான் நான் உன்னை விட்டு போனா, அர்த்தம். அம்மா, அக்காவை பார்த்துக்க…
இவ்வாறு அதில் உருக்கமாக எழுதப்பட்டுள்ளது.