அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியின் தத்துவங்களையும் பணிகளையும், கடமைகளையும் முறைப்படி நிறைவேற்ற முடியாமற்போனதன் மீதான பாராளுமன்றத்தின் அதிருப்தியைத் தெரிவிக்கும் பிரேரணையை இன்று (17) விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்காக நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்திவைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்த பிரேரணையை எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார்.
ஜனாதிபதி மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை கடந்த 11ஆம் திகதி ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் முழு ஐந்து நாட்களின் பின்னரே அதாவது 20ஆம் திகதி இதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும்.
இன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நிலையியற் கட்டளையை இடைநிறுத்திவைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கூறியபோது இதற்குக் குழு இணங்கியது.
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம்.