பாட்னா: ‘பீகாரில் விரைவில் மாநில அளவிலான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் விரைவில் நடக்க உள்ளன. இம்முறை சாதிவாரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால், எஸ்சி, எஸ்டி தவிர வேறு பிரிவினரை சாதிவாரியாக கணக்கிட முடியாது என்பது கொள்கை முடிவு என ஒன்றிய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், பீகாரில் விரைவில் மாநில அளவிலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் நடக்க இருப்பதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடங்குவதற்கு நீண்ட காலம் ஆகாது. இதுகுறித்து ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வியிடமும் பேசிவிட்டேன். இதுதொடர்பாக விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட உள்ளோம். பின்னர் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படும்’’ என்றார்.