ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் அண்மைக்காலமாக புதிய புதிய அமைப்புகளின் பெயர்களை தெரிவித்து வரும் சூழலில் அதை காவல்துறையும் பின்பற்ற வேண்டாம் அவை அனைத்துமே பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் கிளைகளே என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவும், உள்ளூரில் நிகழ்த்தப்படும் சதிச் செயல்களுக்கு உள்நாட்டு அமைப்புகளே காரணம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவுமே தீவிரவாத குழுக்களுக்கு புதிய பெயர்களை பாகிஸ்தான் உருவாக்கிக் கொடுத்துள்ளது என்று அமித் ஷா கூறியுள்ளார்.
அண்மையில் உளவுத்துறை ஒரு தகவலை அரசுக்குக் கூறியுள்ளது. அதில் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற அமைப்புகளுக்கு அவர்களின் நிதி ஆதாரம் தொடர்பாக அரசு நெருக்கடி வலுத்துவருவதாகவும் அதனால் காஷ்மீரில் நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு அவர்களால் நேரடியாக தங்கள் பெயரைக் குறிப்பிட்டு பொறுப்பேற்க முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காரணத்தாலேயே அவர்கள், ஹர்கத் உல முஜாகிதீன், தி ரெசிஸ்டன்ஸ் ப்ரன்ட், தெஹ்ரீக் இ மில்லத் இ இஸ்லாமி, அன்சார் காவத் உல் இந்த், ஜம்மு காஷ்மீர் கஸ்நவி ஃபோர்ஸ் போன்ற பல சிறிய குழுக்களுக்கு புத்துயிர் கொடுக்க முயல்கின்றனர் என்றும் உளவுத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே அண்மையில் ஜம்மு காஷ்ரீ பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தை நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இனி புதிய பெயர்களால் எந்த தீவிரவாத குழுக்களையும் அழைக்க வேண்டாம். எல்லாமே பாகிஸ்தான் அமைப்புகளின் கிளைகள்தான்” என்று ஜம்மு காஷ்மீர் போலீஸ், துணை ராணுவம் மற்றும் ராணுவத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், ட்ரோன் மூலம் தாக்குதல்களை அதிகரிக்க எதிரிகள் திட்டமிட்டு வரும் நிலையில் அதனை எதிர்கொள்ளும் வியூகங்கள் குறித்தும் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ எடையைத் தாங்கி 3 கிலோமீட்டர் பயணிக்கும் ட்ரோன்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும், இவற்றை எதிர்க்கும் ஆன்ட்டி ட்ரோன் ஆயுதங்களை எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அதிகளவில் வழங்க வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.