புதுக்கோட்டை மாவட்டம், குன்னம்வயல் பகுதியில் திருக்கோகர்ணம் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்தப் பகுதி வழியாக டூவிலரில்வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் மூவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியிருக்கின்றனர். அதனால் சந்தேகமடைந்த போலீஸார், டூவீலர் டேங்க் கவரை சோதனையிட்டுப் பார்த்தனர். டேங்க் கவருக்குள் சுமார் 25 கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதையடுத்து, உடனே மூன்று பேரையும் திருக்கோகர்ணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், டூவீலரில் வந்தவர்கள் இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் பிரதிவிராஜ், குன்னவயலைச் சேர்ந்த மதி, தூத்துக்குடியைச் சேர்ந்த கியாபோஸ் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
விசாரணையில், சிக்கிய மூவரில் இளைஞர் கியாபோஸ் போலீஸ் எஸ்.ஐ குமாரவேல் என்பவரின் மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைதுசெய்த போலீஸார், இவர்களிடம் தொடர் விசாரணை நடத்தினர். பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின்பேரில், மேலும் மணப்பாறையைச் சேர்ந்த அன்புச்செழியன், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜோஸ்வா அகியோரும் போலீஸாரிடம் சிக்கினர். இவர்கள் இருவரிடமிருந்து மட்டும் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 5 பேரிடமிருந்தும் 1.25 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும், போலீஸார் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கரவாகனம், மொபைல், ரொக்கப்பணம் ரூ.5,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.