புதுச்சேரி: சாலையில் கட்டிப்புரண்டு சண்டை… மாணவிகள் மோதிக்கொண்ட சம்பவத்தில் நடந்தது என்ன?

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் இயங்கிவருகிறது பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி. தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட 16 துறைகளைக் கொண்டிருக்கும் இந்த கல்லூரியில் நகரம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த சுமார் 5,000 மாணவிகள் பயின்று வருகின்றனர். புதுச்சேரியின் மிக முக்கியமான கல்லூரிகளில் ஒன்றான இந்த கல்லூரி 1968-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படித்த மாணவிகளில் பலர் இன்று அரசு மற்றும் தனியார் துறைகளில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக அங்கு நிலவும் நிர்வாக சீர்கேடுகளால் ஆசிரியர்களை மீறி தன்னிச்சையாக செயல்பட துவங்கியிருக்கின்றனராம் மாணவிகள்.

புதுச்சேரி வாட்ஸ்-அப் குழுக்களில் வெளியான காட்சியில், மாணவி ஒருவர் மற்றொரு மாணவியின் தலைமுடியை பிடித்து கீழே தள்ளுகிறார். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனம் கீழே விழுகிறது. தொடர்ந்து அந்த மாணவிகள் ஒருவரையொருவர் காலால் எட்டி உதைக்கின்றனர். அந்த சண்டையில் ஒரு மாணவி கீழே விழ, மற்றொரு மாணவி அவர் மீது ஏறி அமர்ந்துகொண்டு தாக்குகிறார். அந்த சண்டையை மாணவிகள் சிலர் தடுக்க முயற்சி செய்கின்றனர். அப்படியும் அந்த மாணவிகள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டுக் கொள்கின்றனர். பெற்றோர்களை பதற வைத்த மாணவிகளின் சண்டை காட்சியின் பின்னணி குறித்து விசாரித்தோம்.

அந்த வீடியோ காட்சி பாரதிதாசன் மகளிர் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் இருக்கும் பேருந்து நிலையத்தில் சக மாணவிகளால் எடுக்கப்பட்டிருக்கிறது. கல்வியாண்டு முடியும் நேரத்தில் அனைத்து கல்லூரிகளிலும் பிரிவு உபசார விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் கடந்த 2-ம் தேதி முதல் துறைவாரியாக பிரிவு உபசார விழா மற்றும் புதிய மாணவிகளை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இப்படியான பிரிவு உபசார விழாக்கள் பேராசிரியர்களின் மேற்பார்வையுடன் நடப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் பேராசிரியர்களின் தலையீடு இருக்கக் கூடாது என்றும் பேராசிரியர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கின்றனராம் மாணவிகள்.

கல்லூரிக்குள் டி.ஜே இசை

அதற்கு கல்லூரி நிர்வாகமும் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாணவிகள் தங்களுக்குள் பணத்தை வசூல் செய்து டி.ஜே குழுவை விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள் மாணவிகள். அதனால் கடந்த இரண்டு வாரங்களாக கல்லூரியின் ஆடிட்டோரியம் டி.ஜே இசையால் அலறிக் கொண்டிருந்திருக்கிறது. கடந்த வாரம் பிரெஞ்சுத் துறை மாணவிகளின் பிரிவு உபசார விழா நடைப்பெற்றிருக்கிறது. வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் டி.ஜே இசையுடன் டான்ஸ் நடைப்பெற்றது. அந்த விழாவில் தங்கள் துறையை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்று கண்டிப்புடன் கூறியிருந்தார்கள் பிரெஞ்சுத் துறை மாணவிகள். அதையும் மீறி அங்கு ஆங்கிலத்துறை மாணவி ஒருவர் அந்த விழாவை காண்பதற்கு சென்றிருக்கிறார்.

ஆனால் அவரை அனுமதிக்காமல் வெளியே அனுப்பி கதவுகளை சாத்தியிருக்கின்றனர். அதையடுத்து 10-ம் தேதி ஆங்கிலத் துறை மாணவிகளின் பிரிவு உபசார விழா நடைப்பெற்றிருக்கிறது. அங்கும் அதே டி.ஜே இசை குழு இளைஞர்கள் வந்திருந்தனர். அப்போது பிரெஞ்சுத் துறையைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். ஆனால் அந்த மாணவியை அனுமதிக்காத ஆங்கிலத் துறை மாணவிகள், ”உங்க நிகழ்ச்சியில் எங்களை விடவில்லை. இப்போது நீ மட்டும் எங்கள் நிகழ்ச்சிக்கு எப்படி வரலாம்?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்ற இரண்டு தரப்பும் கடுமையாக மோதிக்கொண்டனர். சிறிது நேரத்திற்குபின் கல்லூரிக்குள் இருக்கும் கேண்டீன் அருகில் பிரெஞ்சுத் துறையைச் சேர்ந்த மாணவியும், ஆங்கிலத் துறையைச் சேர்ந்த ஒரு மாணவியும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

கல்லூரி முதல்வர் ராஜி சுகுமார்

அப்போது ஆங்கிலத் துறை மாணவியின் தோழியான தமிழ்த் துறையைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்கு சென்று என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறார். அப்போது பிரெஞ்சுத் துறையைச் சேர்ந்த மாணவி தமிழ்த் துறை மாணவியை காலால் எட்டி உதைத்திருக்கிறார். அந்த சம்பவத்தையடுத்து பிரச்னை பிரெஞ்சு மாணவிக்கும், தமிழ் மாணவிக்குமாக மாறியது. மறுநாள் 11-ம் தேதி அந்த தமிழ் மாணவி கல்லூரிக்குள் போகும்போதும், வரும்போதும் ஆபாச வார்த்தைகளால் திட்டியிருக்கிறார் பிரெஞ்சு மாணவி. 12-ம் தேதியும் அதேபோன்று திட்டியதால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்தான் தற்போது வெளியாகியிருக்கின்றன. அந்த மோதல் முடிந்ததும் பிரெஞ்சு மாணவி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து கல்லூரிக்கு வந்த அந்த மாணவியின் பெற்றோர், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களின் கண் முன்னே அந்த தமிழ் மாணவியை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வீடியோ காட்சிகள் வெளியானவுடன் புதிய மாணவிகளை வரவேற்றல் மற்றும் பிரிவு உபசார விழாக்களில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் வெளிவரத் துவங்கின. அந்த வீடியோ காட்சிகளில் இளைஞர்கள் டி.ஜேயை இசைக்க அவர்களை சுற்றி நடனமாடுவதும், மேடைகளில் ஆண்கள் நடனமாடுவதும்தான் பெற்றோர்களை பதற வைத்திருக்கிறது. அதனைத் தொடந்து ”மாணவிகள் கல்லூரியில் டி.ஜேவையும், கல்லூரிக்கு தொடர்பில்லாத இளைஞர்களையும் அனுமதித்தது ஏன்? மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் இப்படியான செயல்களை கல்லூரி நிர்வாகம் அனுமதித்தது எப்படி? கல்லூரிக்குள் நுழைந்து முதல்வர் முன்பு மாணவியை தாக்கியவர்கள் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டதா? இந்த விவகாரத்தில் கல்வித்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டு, கவனக்குறைவாக செயல்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று சமூக வலைத்தளத்தில் குரலெழுப்பி வருகின்றனர் பெற்றோர்கள்.

இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக கல்லூரி முதல்வர் ராஜி சுகுமார் அவர்களை தொடர்புகொண்டோம். “மாணவிகளுக்கு தேர்வுகள் நடக்க இருக்கிறது. யாரோ சிலர் செய்த தவறுக்காக மாணவிகள் பாதிக்கப்படுவார்கள்” என்றவரிடம், கல்லூரிக்குள் டி.ஜே இசைக்குழுக்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள் ? என்ற நம் கேள்விக்கு, “ஒரேயொரு டெக்னீஷியனுக்கு மட்டும்தான் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அந்த ஒருவர் டி.ஜே ஆபரேட்டராகவும் இருந்திருக்கலாம். அதுகுறித்து துறை பொறுப்பாளர்களிடம் விசாரிக்க சொல்லியிருக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து, அந்த விழாவில் இளைஞர்கள் சிலர் நடனம் ஆடுகிறார்களே ? என்ற கேள்விக்கு, “நானும் பார்த்தேன். அது எங்கள் கல்லூரிதானா என்பது தெரியவில்லை” என்றார். மோதலில் ஈடுபட்ட மாணவி ஒருவரை கல்லூரிக்குள், உங்கள் அறையில் உங்கள் முன்பும் பேராசிரியர்கள் முன்பும் வேறொரு மாணவியின் பெற்றோர் தாக்கியது எப்படி ? என்று நாம் கேட்டதற்கு, “அந்த விவகாரத்தில் இருவர் மீதும் தவறு இருக்கிறது. அதுகுறித்து இப்போது பேச நான் தயாராக இல்லை” என்று முடித்துக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.