மத விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது தான் நல்லது என்று, திமுக அரசுக்கு மெல்லப் புரியத் தொடங்கியுள்ளதாக, பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை என்பது கட்டாயமில்லை. வாய்ப்புள்ள இடங்களில் அது அமல்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து இது குறித்து தமிழகத்தின் பிரபல செய்தி ஊடகம் ஒன்றிற்கு வானதி சீனிவாசன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது,
“இறைவனை வழிபடுவதற்கு மொழி ஒரு தடையாக இருக்க கூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. அதே சமயத்தில் எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் உரிமை சார்ந்தது.
தமிழகத்தில் ஏற்கனவே பல கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் தமிழிலும் அர்ச்சனை செய்து கொள்கின்றனர். தமிழில் மட்டும்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று யாரையும் வற்புறுத்த முடியாது.
மக்களாக விரும்பி ஏற்றுக் கொள்ளாதவரை இதை அமல்படுத்தவது கடினம் என்று அமைச்சர் சேகர்பாபு சொல்லியிருப்பது சரியானது.
ஒருவேளை தமிழில் அர்ச்சனை செய்ய பக்தர்கள் கேட்டு, அதனை செய்ய மறுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில், தற்போது கட்டாயமில்லை என்ற மாற்றத்திற்கு திமுக அரசு வந்துள்ளது.
மத விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது தான் நல்லது என்று திமுக அரசுக்கு இப்போது மெல்ல புரிய தொண்டாகியுள்ளது ” என்று வானதி சீனிவாசன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.