மனைவி, மகளை அறைக்குள் பூட்டி சுவர் எழுப்பிய தொழில் அதிபர்- கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் மேலும் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய அவலம்

திருப்பதி:

ஐதராபாத், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புல்லாரெட்டி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் 200-க்கும் மேற்பட்ட சுவீட் கடைகளை நடத்தி வருபவர் ராகவாரெட்டி. தொழிலதிபரான இவரது மகன் ஏக் நாத் ரெட்டிக்கும் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் பிரகன்யாவுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.

திருமணத்தின் போது மாப்பிள்ளைக்கு ரூ.75 லட்சம் ரொக்க பணம், ரூ.9.5 லட்சம் மதிப்பில் தங்க வெள்ளி நகைகள், ரூ.35 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் அது தவிர நாத்தனார் சீதனம் என்ற பெயரில் தனியாகவும் வரதட்சணை கொடுக்கப்பட்டுள்ளது.

மணமகள் குடும்பத்தாரிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை பேரம் பேசி பெற்றதாக கூறப்படுகிறது.

இது போதாதென்று ஐதராபாத்தில் வணிக வளாகம் ஒன்றை கூடுதல் வரதட்சணையாக கேட்டுள்ளனர். அது மட்டும் பிரகன்யாவின் பெற்றோர் வாங்கி கொடுக்கவில்லை.

இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. 7 வயதில் மகள் உள்ள நிலையில் ஏக் நாத் ரெட்டி கூடுதல் வரதட்சணை கேட்டு தனது மனைவியை கொடுமைபடுத்தியுள்ளார். மேலும் அவரை விவாகரத்து செய்ய முயன்றுள்ளார்.

2021 ஆம் ஆண்டு அதற்கான நடவடிக்கைகளை ஏக் நாத் ரெட்டி மேற்கொண்ட நிலையில் அவரது விவாகரத்து வழக்கு தள்ளுபடியானதால் மனைவியுடன் ஒரே வீட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஏக்நாத் ரெட்டி கடந்த 10-ந்தேதி வீட்டின் கீழ் பகுதியில் தனது மனைவி மற்றும் மகள் தங்கி இருக்கும் அறையின் மின்சாரத்தையும், தண்ணீர் இணைப்பையும் துண்டித்துள்ளார்.

2 பேரையும் சிறைவைக்கும் எண்ணத்தில் அவர்களது அறையில் இருந்து வெளியேற விடாமல் தடுப்புச்சுவர் கட்டி மனைவியும் மகளையும் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் வீட்டிற்குள் சுவர் கட்டி சிறைவைக்கப்பட்டுள்ள தகவலை தனது பெற்றோருக்கு பிரகன்யா தெரிவித்தார். போலீசாருடன் அங்கு விரைந்து சென்ற அவரது பெற்றோர் தடுப்பு சுவரை உடைத்து பிரகன்யாவையும் அவரது 7 வயது மகளையும் மீட்டனர்.

மேலும் தனது கணவரும், அவரது பெற்றோரும் சேர்ந்து தன்னை தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றதாகவும் பிரகன்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பஞ்சகுட்டா போலீசார் பிரக்னா அளித்த புகாரின் பேரில், ஏக்நாத், அவரது பெற்றோர் ராகவா மற்றும் பாரதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், ராகவா ரெட்டி மற்றும் பாரதி மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டத்தின் கீழ், பேகம்பேட் வருவாய் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் மேலும் வரதட்சணை கேட்டு மனைவி, மகளை தொழிலதிபர் குடும்பம் சித்ரவதை செய்துள்ள இந்த சம்பவம் தெலுங்கானா, ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.