கோடை காலம் என்பதால் தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன் வீட்டு உபயோகத்துக்கான மின் நுகர்வு அதிமானதையடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மின்வெட்டு ஏற்பட்டது. இதற்கு, மத்திய மின்தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு வழக்கமாக கிடைத்து வந்த மின்சாரத்தில் 750 மெகாவாட் திடீரென குறைக்கப்பட்டதால்தான்
மின்வெட்டு பிரச்னை
ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருந்தார்.
அதெல்லாம் இல்லை… தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதற்காகவே தமிழக்தில் செயற்கையாக மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது. திமுகவின் விடியல் ஆட்சியில் தமிழகம் இருட்டில் உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மின்வெட்டு பிரச்னை பெரிய அளவுக்கு செல்வதற்கு முன்பே இதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டதுடன், கத்திரி வெயில் காலத்தில் சட்டென்று மாறிய வானிலையின் காரணமாகவும் மின் தேவை குறைந்து, தமிழகம் மீண்டும் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறியுள்ளது.
ஆனால், பாஜக ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்களில் இன்றும் நாள்தோறும் பல மணி நேரம் மின்வெட்டு நிகழ்ந்து கொண்டிருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதன்படி, பாஜக தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி புரியும் உத்தரப்பிரதேசத மாநில்த்தில் நகர்ப்புறங்களில் அன்றாடம் 4 மணி நேரமும், கிராமப்புறங்களில் 7 மணி நேரத்துக்கு அதிகமாகவும் மின்வெட்டு ஏற்படுகிறது. இதேபோன்று ஜார்கண்ட் மாநிலத்தில் நகர்ப்புற பகுதிகளில் 5 மணி நேரமும், கிராமப்புறங்களில் 7 மணி நேரத்துக்கு கூடுதலாகவும் மின்தடை நிகழ்கிறது.
இதுவே மத்தியப் பிரதேச மாநிலத்தில் நகரங்களில் அன்றாடம் ஒரு மணி நேரமும், கிராமங்களில் 3 மணி நேரத்துக்கு மேலாகவும் மின்தடை ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் பாஜக ஆட்சி செய்யும் குஜராத்திலும், தமிழ்நாடு, கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் பெரும்பாலும் மின்வெட்டு ஏற்படுவதி்ல்லை. அப்படியே நிகழ்ந்தாலும் அது ஒரு மணி நேரத்துக்கு உள்ளாகவே இருக்கிறது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.