பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இன்னும், சில நாட்களில் உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்பட உள்ள நிலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தீர்ப்பு ஒரு சில நாட்களில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் பேரறிவாளன், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தது. பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் நாளைய தீர்ப்பு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
முன்னதாக பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு இரண்டு வாய்ப்புகள் ( options ) வழங்கினோம்; அதில் ஏதேனும் முடிவு செய்து உள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நடராஜ், இந்த வழக்கில் சில வாதங்களை முன்வைக்க உள்ளதாக கூறினார். அதற்கு நீதிபதிகள், ஆளுநர் அமைச்சரவை முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்ப அதிகாரம் உள்ளதா? என வாதத்தை முன்வையுங்கள் என தெரிவித்தனர்.
இதனையடுத்து வாதத்தை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் நடராஜ், இவ்வழக்கில் விடுதலை தொடர்பான அதிகாரம் 72வது அரசியல் சாசனத்தின்படி மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாகவும், ஓரு வழக்கின் விசாரணை எந்த விசாரணை அமைப்பு மேற்கொள்ளப்படுகிறது என்பதை பொறுத்தே அதில் முடிவு எடுக்கும் அதிகாரம் யாருக்கும் என்பது தெளிவுபெறும். உதாரணமாக இவ்வழக்கில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியதால், இந்த வழக்கில் நிவாரணம் வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு என்றார். அதன்படி மாநில அரசின் வரம்புக்குள் வரும் அமைப்புகள் விசாரித்து அதில் தண்டனை பெற்று, அந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவரை தண்டனை காலத்துக்கு முன்னரே விடுவிப்பது தொடர்பான முடிவை மாநில அரசு எடுக்கலாம். ஆனால் பேரறிவாளன் விவகாரத்தில் அவ்வாறு இல்லை என மீண்டும் ஒருமுறை நீதிபதி முன்பு தெளிவு படுத்தினார்.
அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அதிகாரமா? மாநில அரசுக்கு அதிகாரமா? என்று கூறுவதை விட்டுவிட்டு ஆளுநருக்கான சிறப்பு அதிகாரம் 161ஐ பயன்படுத்துவது தொடர்பாக வாதம் வையுங்கள் என கூறினர். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, தமிழக அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கும் முடிவை மத்திய அரசிடம் பகிர்ந்துகொண்டது. அதற்குப் பிறகுதான் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறி தலையிட்டது அதன்பிறகுதான் குழப்பங்கள் தொடங்கியது என்றார். தொடர்ந்து வாதத்தை முன்வைத்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நடராஜ், “302 பிரிவில் தண்டனை பெற்றவர்களுக்கு மாநில அரசு விடுதலை செய்ய அதிகார இல்லை” என்றார். மேலும், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் இரண்டு அரசுகளுக்கும் இது பொதுவான சட்டம் பிரிவாக இருந்தாலும் அதில் முடிவெடுக்கும் என்ற நிலை வரும் பொழுது எந்த விசாரணை அமைப்பு அதில் சம்பந்தப் பட்டிருக்கிறது என்பதை பொறுத்துதான் அதிகாரத்தில் தன்மை சம்பந்தப்பட்ட அரசுக்கு வழங்கப்படும் என்றார்.
அப்போது நீதிபதிகள், IPC இந்திய தண்டனை சட்டம் குற்றங்களுக்கு ஜனாதிபதிக்கு தனி அதிகாரம் உள்ளதா? அப்படியானால், கடந்த 75 ஆண்டுகளில் ஐபிசி குற்றங்களில் ஆளுநரின் மன்னிப்பு அனைத்தும் அரசியலமைப்புக்கு முரணானதா? என கேள்வி எழுப்பினர். நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி மத்திய மற்றும் மாநில அரசு இரண்டுக்கும் அதிகாரம் உண்டு என்றார்.
அப்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ஒரு மாநில அமைச்சரவை தனது சட்ட அதிகாரம் பிரிவின் கீழ் ஒரு முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பும் பொழுது ஆளுநர் அதன் மீது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை செலுத்த முடியாது. ஒரு நபரை விடுவிக்கவும் அல்லது விடுவிக்க மறுக்கவோ தனிப்பட்ட முறையில் அவர் முடிவெடுக்க முடியாது மாநில அமைச்சரவையில் முடிவிற்கு அவர் முழுமையாக கட்டுப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது, குடியரசுத் தலைவருக்கு தமிழக அமைச்சரவையின் முடிவை ஆளுநர் அனுப்பி வைத்த போது என்னென்ன சட்டப்பிரிவுகளின் கீழ் அதிகாரம் இருக்கிறது என்ற விவரங்களை ஏன்? குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார்?? என நீதிபதிகள் மத்திய அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர். ஆளுநரே இவ்விவகரத்தில் கையெழுத்திட்டு முடித்து இருக்க வேண்டும், ஆனால் அதை தவறவிட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளோம் என கூறி குடியரசு தலைவரையும் இவ்வழக்கு உள்ளே இழுத்து விட்டார் என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், அமைச்சரவையின் முடிவிற்கு கையொப்பம் இட வேண்டியது ஆளுநரின் வேலை. ஆனால் அதனை செய்யாமல் ஆவணங்களை கிடப்பில் போட்டு வைத்திருந்தார் எனவும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ளாததன் மூலம் மிகப்பெரிய அரசியல் சாசன பிழையை தமிழக ஆளுநர் செய்துவிட்டார் என வாதத்தை முன்வைத்தார்.
மேற்கொண்டு உள்ள வாதங்களை அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் இவ்வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.
அதனையடுத்து, மத்திய அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தது. அதில், ஏற்கெனவே மரண தண்டனை பெற்ற இவருக்கு கருணை மனு மீது முடிவெடுக்க காலம் தாழ்த்தப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையின் உச்சநீதிமன்றத்தால் தண்டனை குறைப்பு செய்யப்பட்டுவிட்டது. மேலும் தற்போது இவரை விடுதலை செய்வது தொடர்பான மனு குடியரசு தலைவர் முன்பு பரிசீலனையில் உள்ளதாலும், ஏற்கெனவே கடந்த மார்ச் 9ம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையும் கருத்தில் கொண்டு வேறு எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை இந்த விவகாரத்தின், குற்றத்தின் தீவிரத்தன்மை, ஆதாரங்கள் உள்ளிட்ட எதையும் கருத்தில் கொள்ளாமல் முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனவே தான் ஆளுநர் இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் முடிவெடுக்க அனுப்பியுள்ளார். மேலும் இது ஐ.பி.சி 302ன் கீழ் தண்டனை பெற்றாலும் வழக்கை விசாரித்தது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு அவ்வாறு இருக்கும்போது இதில் மாநில அரசு முடிவெடுக்க முடியாது. எனவே தற்போது இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் மட்டுமே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது. எனவே பேரறிவாளன் விடுதலை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
அனைத்துதரப்பு வாதங்களும் எழுத்துப்பூர்வமாக சர்பிக்கப்பட்டுள்ள நிலையில் பேரறிவாளன் விடுதலை வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM