பமாகோ : மேற்கத்திய நாட்டின் பின்னணியில் உருவான ராணுவ புரட்சியை, வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக, மாலி அரசு அறிவித்துள்ளது.மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த மாலியில், ராணுவ தளபதி அசிமி கோய்டா, 2020 மற்றும் 2021ல் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றினார். இதற்கு, ஐேராப்பிய நாடான பிரான்ஸ் உள்ளிட்ட நாடு கள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து, மாலி – பிரான்ஸ் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்தது. மாலியில் தேர்தல் நடத்த பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தி வந்தன. இதையடுத்து, 18 மாதங்களில் தேர்தல் நடத்துவதாக, அசிமி கோய்டா அறிவித்தார். ஆனால், கடந்த பிப்ரவரியில், ‘கெடு’ காலம் முடிந்த பின்னரும், தேர்தல் நடக்கவில்லை.
இதையடுத்து, மாலியில் ஒன்பது ஆண்டுகளாக இருந்த தன் ராணுவத்தை, பிரான்ஸ் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், மாலிக்கு எதிராக பொய் செய்திகள் வெளியிடுவதாக கூறி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரு ஊடகங்களுக்கு, மாலி அரசு தடை விதித்தது.
இத்தகைய சூழலில், ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டதாக, மாலி அரசு நேற்று அறிவித்துள்ளது. மேற்கத்திய நாட்டின் துணையுடன் ராணுவத்தினர் புரட்சி நடத்த முயன்றதாகவும், அதை வெற்றிகரமாக முறியடித்து விட்டதாகவும், மாலி அரசு தெரிவித்துள்ளது. புரட்சியின் பின்னணியில் உள்ள நாடு குறித்த விபரங்களை மாலி வெளியிடவில்லை.
Advertisement