ரூ.25 கோடி மதிப்பிலான பச்சை கல் லிங்கத்தை பத்திரமாக மீட்ட காவலர்கள்

சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைகல் லிங்கமொன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், கடத்தப்பட உள்ளதாகவும் காவலர்களுக்கு தகவல் கிடைத்திருந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து அவர்கள் அதை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திலுள்ள ஆய்வுசெய்ய சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர்  ஜெயந்த் முரளி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் உத்தரவின்பேரில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் தினகரனின் வழிகாட்டுதலின்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் கதிரவன், காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜசேகரன், செல்வராஜ் மற்றும் காவலர்கள் பிரபாகரன், திருபாண்டிய ராஜ், சுந்தர் ஆகியோர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.
image
அங்கே சிலைகளை வாங்கும் வியபாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு சிலை கடத்தல்காரர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இச்சிலைக்கு விலை ருபாய் 25 கோடி என்று அந்நபர்கள் கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து சிலை கடத்தல்காரர்களை நம்பவைத்து அவர்கள் சிலையை காண்பித்தவுடன் தங்கள் தரப்பு நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்துள்ளனர். அதன்படி சிலையை விற்க முயன்ற சென்னை வெள்ளவேடு புதுகாலணியை சேர்ந்த பக்தவச்சலம் (எ) பாலா (வயது 46), சென்னை புதுசத்திரம் கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 42) ஆகியோரிடமிருந்து காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் சிலையை கைப்பற்றி உள்ளார்.
தொடர்ந்து தனி அறிக்கையுடன் மேற்கண்ட நபர்களை சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அலுவலகத்தில் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் ஒப்படைத்தார். இது தொடர்பாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு குற்ற எண்.13/2122-ன் கீழ் என வழக்கு பதிவு செய்யபட்டிருக்கிறது. இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரியான உதவி ஆய்வாளர் செல்வராஜ் மேற்கண்ட நபர்களை கைது செய்து இன்று நீதிமன்ற காவலுக்கு ஆட்படுத்த உள்ளார்.
image
கைப்பற்றப்பட்ட அந்த பச்சை கல் லிங்கத்தில், உலோகத்தால் ஆகிய நாகாபரணம் உள்ளது. அதை தாங்கி அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வர் சுமார் 29 செ.மீ உயரமும் 18 செ.மீ அகலம் கொண்டுள்ளது. போலவே பீடத்தின் அடிபாக சுற்றளவு சுமார் 28 செ.மீ அளவும், அதன் எடை சுமார் 9 கிலோ 800 கிராம் எடையும் உள்ளது. அந்த பச்சை கல் லிங்கம் உயரம் சுமார் 7 செ.மீ என உள்ளது. அதன் சுற்றளவு 18 செ.மீ ஆக உள்ளது. இந்த சிலையையும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளார்.
இதையும் படிங்க… சென்னை: ரயில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்
இந்தச் சிலையானது 500 ஆண்டுகள் தொன்மையானது எனவும் லிங்கத்தின் கீழே சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஆயுதங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது எனவும் சொல்லபடுகிறது. இதிலுள்ள நாகத்தின் பின்புறம் கருடாழ்வார் கைகளை தூக்கிய வண்ணம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் யாவும் நேபாள பாணியில் ஆனது என்று சொல்லப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.