வட தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கல்வியில் வட தமிழ்நாடு மிகவும் பின்தங்கியிருப்பதை அரசு நடத்திய ஆய்வு உறுதி செய்திருக்கிறது. வட தமிழ்நாடு கல்வியில் பின்தங்கியிருப்பதை முதன்முறையாக ஒப்புக்கொண்டு, அப்பகுதியில் கல்வி வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆனால், இது கடலில் தெரியும் பனிப்பாறையின் மேல் முனையளவு தான் என்பதை அரசு உணர வேண்டும்.
பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதம், மகளிர் கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய 44 வட்டாரங்களை தமிழக அரசின் கல்வித்துறை அடையாளம் கண்டிருக்கிறது. அவற்றில் 90%க்கும் மேற்பட்ட வட்டாரங்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவை என்பதை பள்ளிக்கல்வித் துறை ஒப்புக்கொண்டிருக்கிறது.
கல்வியில் இந்த வட்டாரங்களை தமிழகத்தின் பிற வட்டாரங்களுக்கு இணையாக உயர்த்தும் நோக்குடன் அந்த வட்டங்களில் மாதிரி பள்ளிகளை அமைத்தல், ஐ.ஐ.டி போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களை அழைத்து வந்து சிறப்புப் பயிற்சி அளிக்கச் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இந்த நடவடிக்கைகள் அவசியமானவை.
தமிழக அரசின் கல்வித்துறை இப்போது கண்டுபிடித்திருக்கும் இந்த விவரங்களை 30 ஆண்டுகளாகவே பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. கல்வியில் பின்தங்கிய 44 வட்டாரங்களை மட்டுமே அரசு இப்போது அடையாளம் கண்டிருக்கிறது. 200 வட்டாரங்களை அடையாளம் கண்டாலும் கூட, அவற்றில் 90%க்கும் கூடுதலானவை வட மாவட்டங்களில் தான் இருக்கும். இது கல்வியாளர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதனால் தான் வடதமிழகத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக சிறப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
வட தமிழ்நாடு கல்வியில் பின்தங்கியிருப்பதை தமிழக அரசு அடையாளம் கண்டிருக்கும் நிலையில், இன்னும் அடையாளம் காணப்படாத/ ஏற்றுக் கொள்ளப்படாத வட தமிழ்நாட்டின் பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. மனித வாழ்நிலை மேம்பாட்டு குறியீடு, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, தனி நபர் வருமானம், வீட்டு வசதி உள்ளிட்ட அளவீடுகளிலும் வட மாவட்டங்கள் தான் மிகவும் பின்தங்கியிருக்கின்றன. தமிழ்நாடு அரசு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடும் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகள் என்ற ஆவணத்தில் இந்த உண்மைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த உண்மைகளை ஒப்புக்கொண்டு, அவற்றை போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும் கட்சிகள் தவறி விட்டன.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சியும், முன்னேற்றமும் அந்த மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக இருக்க வேண்டும். அது தான் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்கும். அதை விடுத்து ஒரு பகுதியை புறக்கணித்து விட்டு எட்டப்படுவது வளர்ச்சியாக இருக்காது… வீக்கமாகவே இருக்கும். சென்னை புறநகர் பகுதிகளில் தொடங்கி வடக்கில் கடலூர், அரியலூர் மாவட்டங்கள் வரையிலும், மேற்கில் தருமபுரி, சேலம் மாவட்டங்கள் வரையிலும் வாழும் மக்களும், தெற்கில் இராமநாதபுரம் மாவட்ட மக்களும் இன்னும் வளர்ச்சியின் பயன்களை அனுபவிக்கவில்லை. எடுத்துக்காட்டாக சென்னையில் தனிநபர் வருமானம் ரூ.4.12 லட்சம். ஆனால், சென்னை புறநகர் எல்லையிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தின் தனிநபர் வருமானம் ரூ.1.35 லட்சம் மட்டும் தான். அதாவது சென்னையில் ஒருவர் ஈட்டும் வருவாயில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான வருமானத்தையே விழுப்புரம் மக்கள் ஈட்டுகின்றனர்.
சென்னை, கோவை, பெங்களூர் போன்ற நகர்ப்புறங்களை நோக்கிய கிராமப்புற மக்களின் இடப்பெயர்வுக்கு வட மாவட்டங்கள் வளர்ச்சி அடையாதது தான் காரணம் ஆகும். வட மாவட்டங்களை புறக்கணித்து விட்டு தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வது சாத்தியமில்லை. இதை தமிழக அரசு உணர வேண்டும். கல்வியில் பின்தங்கியுள்ள பகுதிகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கது.
இது அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். வடக்கு மாவட்டங்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் போன்ற பிற பின்தங்கிய மாவட்டங்களில் மனித வாழ்நிலை மேம்பாடு தொடர்பான அனைத்து அம்சங்களிலும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இக்கோரிக்கையை தேர்தல் அறிக்கை, நிழல் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல… இந்தியாவின் பல மாநிலங்களில் இத்தகைய சீரற்ற வளர்ச்சித் தன்மை உள்ளது. அதை சரி செய்வதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. மராட்டியம், குஜராத், நாகலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர், ஆந்திரம், சிக்கிம், மிசோரம், அருணாச்சலப்பிரதேசம், கோவா, ஹைதராபாத் – கர்நாடக மண்டலம் ஆகியவற்றில் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 371 முதல் 371 (ஜே) 11 பிரிவுகள் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளன. அதேபோல், தமிழ்நாட்டிலும் பின்தங்கிய பகுதிகளின் முன்னேற்றத்திற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் 371(கே) என்ற பிரிவை சேர்த்து அதன்படி தனி வளர்ச்சி வாரியத்தை உருவாக்கி, அதன்மூலம் வட மாவட்டங்களில் சிறப்புத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டும்”
இவ்வாறு அந்த அறிக்கையில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.