வன்முறை அதிகரிப்புக்கு ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தான் காரணம்.. பகீர் குற்றச்சாட்டு

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த வன்முறைக்கு காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தான் காரணம் என அம்மாநில முன்னாள் முதல்வர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 1990ஆம் ஆண்டுகளில் காஷ்மீரில் இருந்து இந்துக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. 

இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டுள்ளதாக வலதுசாரி அமைப்புகள் பாராட்டுத் தெரிவித்தன. மத்திய ஆளும் கட்சியும் வரவேற்பு தெரிவித்தது. அதேவேளையில், வரலாற்றை திருத்தி அமைக்கும் முயற்சியாக இந்த திரைப்படம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தபோதிலும் வணிக ரீதியாக இப்படம் வெற்றியை பெற்றது. தற்போது ஒடிடி தளத்திலும் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக பண்டிட் சமூகத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, அரசு அதிகாரியான ராகுல் பாட் என்ற பண்டிட் நபர் அண்மையில் கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்புக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. 

kasmir files

இந்த சம்பவம் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் நாடு முழுவதும் மற்றும் காஷ்மீர் இளைஞர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடம் கூறினேன்,  ஒரு இந்துவைக் கொன்றுவிட்டு அவன் மனைவியிடம் ரத்தத்தில் ஊறிய அரிசியை உண்ணச் சொன்னால் எப்படி நம்புவது? காஷ்மீர் மக்கள் இவ்வளவு கீழ்த்தரமானவர்களா? காஷ்மீர் இளைஞர்கள் எப்படிப்பட்டவர்கள் என வெளியில் தவறாக காட்டப்படுவது அவர்களை கோபம் அடைய செய்துள்ளது, என கூறியுள்ளார்.

இதேபோல், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி கூறுகையில், காஷ்மீர் பண்டித்களுக்கு பாதுகாப்பான சூழலையே நாங்கள் உருவாக்கி வைத்திருந்தோம். 2016ஆம் ஆண்டு பதற்றமான சூழலிலும் ஒருகொலையும் நடைபெறவில்லை. காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற திரைப்படங்கள் வன்முறையை தூண்டியுள்ளது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைத்ததுடன், வன்முறையையும் தூண்டிவிட்டிருக்கிறது என கூறியுள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.