வேலூர்: வேலூர் சிறையில் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் பேசிய வழக்கில் சாட்சியங்களிடம் விசாரணை முடிந்த நிலையில் முருகனிடம் புதன்கிழமை (மே 18) இறுதிகட்ட விசாரணை நடைபெற உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் என்ற ஸ்ரீகரன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குடும்பத்தினரை சந்தித்துப் பேச 6 நாள் பரோல் வழங்கக் கோரிய மனு சிறை நிர்வாகத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் மீதான வழக்குகளின் நிலுவையை காரணம் காட்டி பரோல் மனு நிராகரிக்கட்டதாக கூறப்பட்டது.
சிறை நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து முருகன் கடந்த 16 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சிறை நிர்வாகம் வழங்கும் ரேஷன் பொருட்களையும் அவர் வாங்க மறுத்து உண்ணாவிரதத்தை தொடர்கிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு சிறையில் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் மனைவி நளினியிடம் பேசுவதற்கு முருகனுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது, வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் அவர் குரூப் கால் முறையில் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை வேலூர் ஜே.எம் 3-வது நீதிமன்றத்தில், நீதிபதி பத்மகுமாரி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இதற்காக பலத்த பாதுகாப்புடன் முருகன் இன்று இரண்டாவது நாளாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறைத்துறை தலைமை வார்டன் இமானுவேல், வழக்கு விசாரணை அதிகாரியான உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோரிடம் முருகன் சுமார் ஒன்றரை மணி நேரம் குறுக்கு விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் வழக்கறிஞருக்கு பதிலாக முருகனே வாதித்து வருவது குறிப்பிடத்தக்கது. முருகனின் குறுக்கு விசாரணை முடிந்ததால் வழக்கை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் பத்மகுமாரி உத்தரவிட்டார்.
இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ‘‘முருகன் மீதான இந்த வழக்கில் 10 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அனைவரிடம் முருகன் தனது குறுக்கு விசாரணையை முடித்துள்ளார். முருகனுக்கு எதிராக சாட்சியங்கள் அளித்துள்ள நபர்களின் கருத்துகள் தொடர்பாக முருகனிடம் நாளை (மே18) மாஜிஸ்திரேட் இறுதிகட்ட விசாரணை செய்வார். இதற்காக அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்’’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.