விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்?
தமிழ்த் திரையுலகில் தற்போதைய வசூல் நாயகர்களாக விஜய், அஜித் ஆகிய இருவர் மட்டுமே இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தன. இந்நிலையில் தற்போது 'டான்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த இருவர் பட்டியலில் மூன்றாவதாக சிவகார்த்திகேயன் இணையும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகச் சொல்கிறார்கள்.
'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து 'டான்' படமும் குடும்ப ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்துள்ளது என தியேட்டர்காரர்கள் மகிழ்கிறார்கள். ரஜினிகாந்த், விஜய் வரிசையில் குழந்தைகள், குடும்பங்கள் என அனைவரும் பார்க்கும்படியான படங்களை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதில் சிவகார்த்திகேயன் கவனமாக இருப்பதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகிறார்கள்.
இந்நிலை தொடர்ந்தால் விஜய், அஜித் ஆகியோரது இடத்தை சிவகார்த்திகேயன் நெருங்குவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உறுதியுடன் கூறுகிறார்கள். இன்றைய ஹீரோக்களில் நகைச்சுவையை எளிதில் கையாளும் ஒருவராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். அவருக்கு நடனமாடவும் நன்றாக வருகிறது. நம்மில் ஒருவராக அவரை ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்றும் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறது கோலிவுட். 'டான்' படம் நான்கு நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்துவிட்டது என்றும் தெரிவிக்கிறார்கள்.
'டான்' படமும் 100 கோடியைக் கடந்தால் சிவகார்த்திகேயன் மீதான நம்பிக்கை திரையுலகத்தில் இன்னும் அதிகமாகும் என கணிக்கிறார்கள். இதை சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் தக்க வைக்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.