வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள விஜயகரிசல்குளம் உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணாலான அகல்விளக்கு, யானைத் தந்தால் செய்யப்பட்ட அணிகலன் மற்றும் சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அகழாய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்ககாலத்தில் பயன்படுத்திய சுடுமண்ணாலான குவளை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தமிழகத் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது வரை அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருள்கள் மூலம் தொன்மையான மனிதர்கள் சுடுமண்ணில் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருள்களைப் பயன்படுத்தியுள்ளது தெரியவருகிறது. இது ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.