கோவை: மேற்குதொடர்ச்சி மலை அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலையில் இருந்து இரண்டு டிராக்டர் அளவிற்கு பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வலர்கள் அகற்றி உள்ளனர்.
கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில். தென் கயிலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இந்தக் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால், பிப்ரவரி மாதம் கடைசி முதல் மே மாதம் வரை மட்டுமே மலை ஏறுவதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்குகின்றனர். முள்ளாங்காடு வனத்துறை சோதனைச் சாவடி வழியாக, மலையடிவாரத்தில் உள்ள பூண்டி கோயில் சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாக சுமார் 6 கி.மீ பக்தர்கள் மேலே நடந்து செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் போது பலர் தாங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிஸ்கெட், தின்பண்டங்களின் கவர்களை அங்கேயே தூக்கி எறிந்து விட்டு வருகின்றனர். இதனால், மலைப்பாதை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குகிறது. இவ்வாறு தேங்கும் கழிவுகளை அகற்றுவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில்,வெள்ளியங்கிரி மலை மற்றும் அதன் அடிவாரப் பகுதிகளில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை 350-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் அகற்றினர். இது தொடர்பாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கூறும்போது, “வனப்பணியாளர்கள், இந்துசமய அறநிலையத் துறை ஊழியர்கள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, தென் கயிலாய பக்தி பேரவை, சிறுவாணி விழுதுகள் ஆகிய அமைப்புகளின் தன்னார்வலர்கள், என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் இணைந்து பிளாஸ்டிக் அகற்றும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
முதல் மலையை முற்றிலுமாக சுத்தம் செய்த தன்னார்வலர்கள், ஏழாவது மலை வரையிலும் சென்று தங்களால் முடிந்த பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து வந்தனர். இரண்டு டிராக்டர் அளவு குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள், செருப்புகள், பிஸ்கட், சாக்லெட் கவர்கள், ஹான்ஸ் பாக்கெட் கவர்கள் அப்புறப்படுத்தப்பட்டன” என்றனர்.