Durga Stalin prays at Sivaganga Perumal temple: தனது கணவர் முதல்வராக வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறியதால் பெருமாளுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றினார் துர்கா ஸ்டாலின்.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ள சௌமியநாராயணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் இன்று நடைபெற்ற கோபுரத்தில் தங்க தகடு பொருத்தும் பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த துர்கா ஸ்டாலினுக்கு, கோயில் பட்டாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க, தேவஸ்தான அறங்காவலர் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையும் படியுங்கள்: புரட்டிப் போட்ட கொரோனா; மொய்த்த முதலீட்டாளர்கள்; தஞ்சை பஸ் அதிபர் கைது!
இதனிடையே, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும் என துர்கா ஸ்டாலின் ஏற்கெனவே மூன்று முறை இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டதாகவும், தற்போது அந்த வேண்டுதல் நிறைவேறியதால் நான்காவது முறையாக வருகை புரிந்ததாகவும் கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
பின்னர் கோவிலில் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கோயில் விமானத்துக்கு செப்பு தகட்டில் தங்கத்தகடு பொருத்தும் பணியை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். தேரில் எழுந்தருளிய உற்சவரை தரிசனம் செய்தார்.
துர்கா ஸ்டாலின் வருகையையொட்டி, சிவகங்கை எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.