MS Dhoni responds on CSK fans letter goes viral: சிஎஸ்கே ரசிகரின் கடிதத்திற்கு தோனி அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னணியில் உள்ளது. அதுவும் கேப்டன் தோனிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிஎஸ்கே தோற்றாலும் வெற்றி பெற்றாலும் ரசிகர்கள் எப்போதும் அணியை விட்டுக் கொடுத்ததேயில்லை.
அதேபோல், தோனியும் தனது ரசிகர்களின் இதயங்களை வெல்வதில் எப்போதும் தவறியதில்லை. இந்த நிலையில், ‘கேப்டன் கூல்’ என்றும் அழைக்கப்படும் தோனி மீண்டும் ஒரு படி மேலே சென்று, சமூக ஊடகங்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சிஎஸ்கே ரசிகர் ஒருவர் தோனிக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில் தோனி மீதான தனது அபிமானத்தையும், இந்திய உலகக் கோப்பை வென்ற கேப்டன் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய தனிப்பட்ட தாக்கத்தையும் அந்த ரசிகர் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இதனைப் பார்த்த தோனி, அந்தக் கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார். “நன்றாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துகள்” என்று எழுதியதோடு, அதில் கையெழுத்தும் போட்டுள்ளார்.
நான்கு முறை சாம்பியனான சூப்பர் கிங்ஸ் அணியின் முதுகெலும்பாக தோனி திகழ்கிறார். 2022 சீசனில், தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், போட்டியின் நடுவில், ஜடேஜா தலைமைப் பொறுப்பை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்தார். தோனி மீண்டும் கேப்டனாக மாறியவுடன், ரசிகர்கள் சமூக ஊடக தளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படியுங்கள்: தொடக்க வீரர் பந்தை தெறிக்கவிட்ட மார்கண்டே… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!
இதற்கிடையில், கேப்டன் பதவியில் இருந்து விலகிய சில நாட்களுக்குப் பிறகு, ஜடேஜா விலா எலும்பு காயம் காரணமாக 2022 சீசனில் இருந்து வெளியேறினார்.
தோனி மீண்டும் பொறுப்பேற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றாலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. சூப்பர் கிங்ஸ் அணி 4 வெற்றிகள் மற்றும் 9 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.