★ முன்பெல்லாம் சினிமா தியேட்டர்களில் சில சமயம் வக்கீல் ஐயப்பன், அவர் மனைவி ராஜேஸ்வரியுடன் இரண்டு பெண்கள் முஸ்லிம்களைப் போலத் தங்களை மூடிக்கொண்டு பர்தா போட்டுக் கொண்டு படம் பார்க்க வருவார்கள்.
★ யார் அப்படி வந்திருக்கிறார்கள் என்று பலருக்குத் தெரியாது. ஸ்ரீதேவியும் அவர் தங்கை ஸ்ரீலதாவும் தான் தன் பெற்றோருடன் படம் பார்க்க அப்படி வந்து கொண்டிருந்தனர்.
★ ஐந்து வயதுச் சிறுமியாக இருக்கும்போது துணைவனில் நடிக்கத் துவங்கிய ஸ்ரீதேவி, தொடர்ந்து பல மொழிப் படங்களில் நடித்து நட்சத்திரமானார்.
★ பாலசந்தரின் `மூன்று முடிச்சு’களில் நடிக்கும்போது இவர் வயது 13-தான்!
★ இப்போதும் `உங்கள் வயது என்ன?’ என்று கேட்டால் கூச்சப்படாமல் வயதைச் சொல்லி ``13.8.1963-தான் என் டேட் ஆஃப் பர்த்” என்பார் ஸ்ரீதேவி.
★ இவ்வாறு பிறந்த தேதி வருடத்துடன் வயதைச் சொல்லும் நடிகை வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
★ இவர் ஹிந்தி நடிகை ரேகாவிற்குத் தோழி; ரேகா ஸ்ரீதேவியின் விசிறி. ரேகா தன் படுக்கை அறையில் ஸ்ரீதேவியின் படத்தைத்தான் மாட்டியிருக்கிறாராம். அந்த அளவுக்கு இவரைப் பிடிக்குமாம்!
★ ஸ்ரீதேவி கலகலப்பாகப் பேசுபவர்களிடம் கலகலப்பாகப் பேசுவார்; உம்மணாமூஞ்சிகளிடம் உம்மணாமூஞ்சியாகவே இருப்பார்.
★ வீட்டில் ஓய்வு நேரத்தில் எப்போதும் சுறுசுறுப்பாகத்தான் காணப்படுவார். ஒன்று, சைக்கிள் விட்டுக் கொண்டிருப்பார், அல்லது டான்ஸ் கற்றுக்கொண்டிருப்பார்.
★ தந்தையைவிட, தாயின் கண்டிப்பு அதிகம். பெற்றோர் கிழித்த கோட்டை ஸ்ரீதேவி தாண்டியதில்லை. அப்பா அம்மாதான் பி.ஏ., செகரட்டரி எல்லாம்!
★ இவ்வளவு ஏன்? ஒரு படத்திற்குத் தனக்கு எவ்வளவு சம்பளம் என்பதுகூட ஸ்ரீதேவிக்குத் தெரியாது!
★ `ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறோம். அதற்கு மேல் படிக்க முடியவில்லையே’ என்ற மனக் குறை ஸ்ரீதேவிக்கு உண்டு. ஆனால் வீட்டிலேயே ஆங்கிலம், ஹிந்தி, வீணை, வாய்ப்பாட்டு இப்படிப் பலவற்றை டியூஷன்கள் வைத்துச் சொல்லிக் கொள்கிறார். ஆங்கிலம், ஹிந்தி பேசுவார்.
★ இவ்வளவு இருந்தும், தமிழில் `மூன்று முடிச்சு’க்குப் பிறகு நல்ல காரெக்டர் ரோல் தனக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் ஸ்ரீதேவியிடம் இருக்கிறது.
★ ஸ்ரீதேவி மலையாளம், தெலுங்கு இந்த மொழிப் படங்களில் காரெக்டர் ஆர்ட்டிஸ்ட். தமிழில் மட்டும் இதுவரை ஏனோ கிளாமர் ஆர்ட்டிஸ்ட்தான்!
– பாலா