6 மாதங்களுக்குள் அனைவருக்கும் கிரீன் கார்டு; அமெரிக்க அதிபர் ஆலோசனை குழு பரிந்துரை| Dinamalar

வாஷிங்டன் : ‘அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான, ‘கிரீன் கார்டு’ கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மீது, ஆறு மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்’ என, அமெரிக்க அதிபருக்கான ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. இது, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு, பல்வேறு வகை விசாக்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, ‘எச்1பி விசா’ அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் மென்பொருள் இன்ஜினியர்கள் உட்பட, தொழில்முறை பணிகளில் அதிக அளவில் இது வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்காக, ‘கிரீன் கார்டு’ வழங்கப்படுகிறது. தற்போதுள்ள நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு நாட்டுக்கும், குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே கிரீன் கார்டு வழங்கப்படுகிறது.அதன்படி, இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும் கிரீன் கார்டுகளில், 7 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. அதே நேரத்தில், ஆயிரக்கணக்கானோர் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து, நீண்ட காலம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.

கட்டுப்பாடு
இந்நிலையில், அமெரிக்க அதிபருக்கான ஆசிய அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மக்கள், பசிபிக் தீவுகளைச் சேர்ந்தோருக்கான ஆலோசனை குழுவின் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், கிரீன் கார்டு விசா வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்தும்படி, அமெரிக்க வாழ் இந்தியரான அஜய் ஜெயின் புதோரியா வலியுறுத்தினார். இதை, அந்தக் குழுவில் உள்ள, 25 உறுப்பினர்களும் ஏற்றனர்.

இந்த குழு, தன் பரிந்துரையை அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:விசா வழங்குவதில், 1990களில் உருவாக்கப்பட்ட விதிமுறைகளில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. அதுபோல, கிரீன் கார்டு வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.கடந்த, 2021 – 2022 நிதியாண்டில், மொத்தம் வழங்க திட்டமிடப்பட்ட, 2.26 லட்சம் கிரீன் கார்டுகளில், 65 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கானோருக்கு கிரீன் கார்டு கிடைக்கவில்லை.

நடவடிக்கை
இந்தாண்டு ஏப்., மாத நிலவரப்படி, 4.21 லட்சம் கிரீன் கார்டு விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை, அடுத்த ஓராண்டுக்குள் வேகமாக பரிசீலித்து, நிலுவையை குறைக்க வேண்டும்.கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்த ஆறு மாதங்களுக்குள் அதன் மீது முடிவு எடுக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அமெரிக்க குடியேற்ற துறை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.அதிபர் ஒப்புதல் அளித்ததும், இந்த பரிந்துரை நடைமுறைக்கு வரும். இதன் வாயிலாக, கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.