MI v SRH: த்ரிபாதியால் பிளேஆஃப் ரேசில் தொடரும் ஐதராபாத்; சென்னை ரசிகர்களைப் பதறவைத்த மும்பை சேஸிங்!

மூன்று அணிகள் தங்களின் ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில் மீதி உள்ள ஒரே ஒரு இடத்துக்காக நான்கு அணிகள், டிக்கெட் வாங்கப் போராடும் ‘மன்னன்’ ரஜினி போல முட்டி மோதிக்கொண்டுள்ளன. அதில் கடைசி இடத்திலிருக்கும் சன்ரைஸர்ஸுக்கு இது வாழ்வா சாவா வாய்ப்பு. மறுமுனையில் மும்பைக்கு இது கெளரவப் பிரச்னை. காரணம் அந்த அணி இதுவரை புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் முடித்ததே இல்லை.

இப்படியாக ஒரு அணி பிளேஆஃப் கடைசி இடம் வேண்டுமெனவும் இன்னொரு அணி லீக்கின் கடைசி இடம் வேண்டாமெனவும் முனைப்பாகக் களத்திற்கு வர, மூன்றாவதாக ஒரு அணியின் ரசிகர்களும் இந்தப் போட்டியை ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பிளேஆஅப் போனா போதும் எனத் தொடங்கி கெளரவமா தோத்தாப் போதும் என இறங்கி வந்து, கடைசியாய் தோனி ஆடுறதைப் பார்த்தாப் போதும் என மனதைத் தேற்றிக்கொண்டிருக்கும் சென்னை ரசிகர்கள்தான் அது. காரணம், சென்னையும் இதுவரை கடைசி இடத்தில் முடித்தது இல்லை. 2020-ல் ராஜஸ்தான் காட்டிய கருணையில் ஜஸ்ட் மிஸ். போக, மும்பை தங்களைக் கீழிறக்கினால் அது சென்னை ரசிகர்களுக்கு பலத்த சேதாரம்.

MI v SRH

மும்பை அணியில் பெஞ்ச்சில் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு தரவேண்டும் என்பதற்காக மயாங்க் மார்கண்டேவையும், சஞ்ஜய் யாதவையும் ப்ளேயிங் லெவனில் சேர்த்திருந்தார்கள். குமார் கார்த்திகேயாவும் ஹ்ரித்திக் செளகீனும் வெளியே. இதில் ஆல்ரவுண்டர் சஞ்ஜய் யாதவ் முன்பு தமிழக அணிக்காக ஆடியவர். டிஎன்பிஎல்லில் திருவள்ளூர் வீரன்ஸுக்காக காட்டிய திறமை இவரை முதன்முதலாக ஐ.பி.எல் பக்கம் கொண்டுவந்தது. ஹைதராபாத் அணியில் ஷஷாங்க் சிங்கிற்கு பதில் ப்ரியம் கர்க், மார்க்கோ ஜென்சனுக்குப் பதிலாக தன் முதல் ஆட்டத்தில் கவனம் ஈர்த்த பசல் பரூக்கி.

டாஸ் வென்ற கேப்டன் என்ன செய்வார்? அதேதான். பீல்டிங்கைத் தேர்வு செய்தார் ரோஹித். ஓப்பனிங்கில் வில்லியம்சன் திருவிழாவை முதல் தடவை பார்க்கும் குழந்தை போல தடுமாறுவதால் அபிஷேக் சர்மாவோடு ஓப்பனிங் இறங்கினார் ப்ரியம் கர்க். முதல் இரண்டு ஓவர்களில் 12 ரன்கள்தான். போதாக்குறைக்கு அபிஷேக்கும் மிட் ஆப்பில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு அவுட்டாக, வழக்கம் போல சொதப்பலான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சன்ரைஸர்ஸுக்கு. ஒன் டவுனில் இறங்கினார் ராகுல் த்ரிபாதி. தசாவதாரம் படத்தில் வரும் கமல் போலத்தான் த்ரிபாதி. ஓப்பனிங்கில் வந்து மாஸ் காட்டும் சயின்டிஸ்ட் கோவிந்தாக இறங்குவார். மிடில் ஆர்டரில் இறங்கி, கதையை நகர்த்தும் பல்ராம் நாயுடு போல ரன்ரேட்டை நகர்த்துவார். அதிரடி ப்ளெட்சர் போல பினிஷர் ரோலிலும் மிரட்டுவார். இந்தத் தலைமுறை இந்திய வீரர்களில் ‘தி பெஸ்ட் ப்ளோட்டர்’ த்ரிபாதிதான்.

Rahul Tripathi | MI v SRH

அந்தப் பெருமைக்கு ஏற்றவகையில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார் த்ரிபாதி. சஞ்ஜய் யாதவின் ஓவரில் இரண்டு பவுண்டரி, பும்ராவின் ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என அவர் காட்டிய காட்டில் பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 57/1. திடீரென ஆவேசம் வந்தவராய் ப்ரியம் கர்க்கும் வெளுக்க ப்ரேக்கே இல்லாத தண்ணி லாரி போல வேகமாய் ஓடியது ஸ்கோர். மிடில் ஓவர்கள் என்றுகூட பார்க்காமல் மாறி மாறித் துவைத்தார்கள்.

சென்னையுடனான மேட்ச்சில் எனக்கும் விக்கெட் வேணும் என அடம்பிடித்து பௌலிங் போட்ட ரமன்தீப்பை ரோஹித் அழைத்துவர, இந்த ஆட்டத்திலும் அடித்தது யோகம். வந்த வேகத்தில் பந்தை பௌலரிடமே திருப்பிவிட்டு அவுட்டானார் கர்க். ஒரு பெரிய இடைவெளிக்குப் பின் ஆடிய கர்க் எடுத்தது 26 பந்துகளில் 42 ரன்கள். ‘அவனாவது பரவாயில்ல, இறங்கி இறங்கித்தான் அடிப்பான். நானெல்லாம் இரக்கமே காட்டாம அடிப்பேன்’ என அடுத்துவந்த பூரனும் தன் பங்கிற்கு சாத்த, பந்து பேட்டுக்கும் பவுண்டரிக்குமாய் பயணப்பட்டுக்கொண்டிருந்தது.

மெரிடித் வீசிய 13 ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள், மார்க்கண்டே வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி, சாம்ஸ் வீசிய 16 ஓவரில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸ் என வாணவேடிக்கைதான். பெரும் போராட்டத்திற்குப் பிறகு பூரனை ஏமாற்றி பெவிலியனுக்கு அனுப்பினார் மெரிடித். அடுத்த ஓவரில் ரமன்தீப்புக்கு அடித்தது பம்பர். நாலாப்பக்கமும் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த த்ரிபாதியும் நடையைக் கட்டினார். 44 பந்துகளில் 76 ரன்கள். அதே ஓவரின் கடைசி பந்தில் ஒன்று வாங்கினால் ஒன்று ப்ரீ ஆடி ஆபர் போல மார்க்ரமும் அவுட். 18 ஓவர் முடிவில் ஸ்கோர் 175/5.

‘நான் பினிஷர்னு சொன்னா நியூசிலாந்துகாரனே நம்பமாட்டான்யா’ என பதற்றமாகவே இருந்தார் களத்திற்கு வந்த கேப்டன் கேன் வில்லியம்சன். பவுண்டரியே இல்லாமல் தட்டித் தட்டி 19வது ஓவரில் 11 ரன்கள் எடுத்தார்கள். கடைசி ஓவரில் பும்ரா தன் வித்தையைக் காட்ட வெறும் ஏழு ரன்கள், ஒரு விக்கெட். பும்ரா டி20யில் வீழ்த்தும் 250வது விக்கெட் இது. கிட்டத்தட்ட ஐந்தாவது ஓவர் தொடங்கி கடைசி ஓவர் வரை பத்து எனும் ரன்ரேட்டை குறையாமல் மெயின்டெயின் செய்தார்கள் சன்ரைஸர்ஸ் பேட்ஸ்மேன்கள். அதனால் ஸ்கோர் 193/6.

MI v SRH

முதல் ஓவரை அற்புதமாக வீசினார் பசல் பரூக்கி. இரண்டே ரன்கள். ஆனால் அடுத்த ஓவரிலிருந்து பேட்டை சுழற்றத் தொடங்கினார்கள் ரோஹித்தும் இஷான் கிஷனும். ஹைதராபாத் போலவே பத்து என்னும் ரன்ரேட்டை தக்கவைக்க பிளான் செய்து அடிக்க விறுவிறுவென ஏறியது ஸ்கோர். தன் முதல் ஓவரை வீசிய நடராஜனை 16 ரன்களுக்கு விரட்டினார்கள் இருவரும். பசல் பரூக்கி வந்துதான் திரும்ப ஸ்பீட் பிரேக் போடவேண்டியதிருந்தது. பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 51/0.

அடுத்த இரண்டு ஓவர்கள் போராடி வாஷிங்டனும் நடராஜனும் தக்கவைக்க, `என்ன இருந்தாலும் இந்தியா கேப்டன். அவருக்கு மரியாதைத் தரலன்னா எப்படி?’ என அடுத்த ஓவரில் அநியாயத்திற்கு கரிசனம் காட்டினார் உம்ரான் மாலிக். நோ பால், வைட், பை, லெக் பை என எல்லாவித எக்ஸ்ட்ராக்களையும் பார்த்த அந்த ஓவரில் 17 ரன்கள். போதாக்குறைக்கு பார்ட் டைம் பௌலரான அபிஷேக் சர்மாவும் 11 ரன்களை வாரித்தர ஸ்கோர் 10 ஓவர்கள் முடிவில் 89/0.

அரைசதத்தை நெருங்கிய நிலையில் சுந்தர் பந்தை ரோஹித் இறங்கி வந்து மிட்விக்கெட் பக்கம் தூக்க… விக்கெட்! அஷ்வினை ராஜஸ்தான் இறக்குவது போல இந்த மேட்ச்சிலும் ஒன் டவுனில் சாம்ஸை இறக்கியது மும்பை. இந்த கேப்பில் உம்ரானை, ‘கோட்டைசாமி எழுந்திரி’ என கேன் வில்லியம்சன் உசுப்பினாரோ என்னவோ, இஷானை அவுட்டாக்கி வெளியே அனுப்பினார் உம்ரான். ஸ்கோர் 12 ஓவர்கள் முடிவில் 102/2. டேனியல் சாம்ஸ் ஆடிய குட்டி கேமியோவில் அடுத்த இரண்டு ஓவர்களில் 21 ரன்கள். 15வது ஓவரில் உம்ரானின் மின்னல் வேகத்தைக் கணிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினார்கள் திலக் வர்மாவும் டேனியல் சாம்ஸும்.

MI v SRH

இப்போது மும்பைக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை டிம் டேவிட் மட்டுமே. பலகோடி கொடுத்து எடுத்ததற்கு இன்னும் ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் கூட ஆடவில்லை டிம் டேவிட். ‘ஆமா டீம்ல யாருமே அப்படி ஒரு இன்னிங்ஸ் ஆடல. நான் மட்டும் எதுக்கு?’ என இத்தனை நாள்களாய் நினைத்திருந்தாரோ என்னவோ. இந்த முறை தெளிவாக நடராஜனை டார்கெட் செய்தார். நடராஜன் வீசிய 16வது ஓவரில் 13 ரன்கள். புவனேஷ்வர் குமாரின் அனுபவம்தான் சன்ரைஸர்ஸ் அணியின் டேமேஜ் கன்ட்ரோல் மந்திரம். 17வது ஓவரை வீசிய அவரின் டைமிங்கில் ஸ்டப்ஸ் ரன் அவுட். பிரஷர் இன்னும் எகிறியது டிம் டேவிட் மீது.

ஏற்கெனவே குறிவைத்திருந்த நடராஜன் ஓவரை சூப்பராக பயன்படுத்திக்கொண்டார் டிம் டேவிட். அந்த ஓவரில் மட்டும் நான்கு சிக்ஸ்கள். அதிலும் ஒன்று 114 மீட்டர். டார்கெட் சட்டென தொட்டுவிடும் தூரத்திற்கு வந்துவிட்டது. கூடவே சென்னை ரசிகர்களுக்கு பீதியும். கடைசி பந்தில் ஸ்ட்ரைக்கை தக்கவைக்க டிம் டேவிட் சிங்கிள் எடுக்க முயல, ‘மாட்டுன மவனே’ என சமயோசிதமாக ரன் அவுட் செய்தார் நட்டு. அத்தோடு விழுந்தது வெற்றிக் கனவில் மண். 19வது ஓவர் புவியின் அசத்தலான பௌலிங்கில் விக்கெட் மெய்டன். ‘ஓ அப்போ நான் யார்க்கர் போடுறப்போ இப்படித்தான் இருக்கும் போல பேட்ஸ்மேனுக்கு’ என பொறுமையாக பாடம் கற்றுக்கொண்டிருந்தார் பும்ரா. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை. போடுவது நல்ல பார்மில் இருக்கும் பசல் பரூக்கி. அடிக்க நிற்பது இரண்டு புதிய பேட்ஸ்மேன்கள். அப்புறமென்ன… 15 ரன்களே போராடி எடுக்க முடிந்தது மும்பையால். ஆட்டநாயகன் த்ரிபாதியேதான்.

MI v SRH

மும்பையின் கடைசி ஆட்டம் டெல்லியுடன். வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் டெல்லி இருப்பதால் முடிந்தவரை போராடும் என்பதில் சந்தேகமில்லை. மறுபக்கம் சென்னை மிக மோசமாய் தோற்று, மும்பை அணி டெல்லியை பிரமாதமாய் வென்றால் மட்டுமே சென்னை கடைசி இடத்திற்குப் போகும். சென்னை இந்த சீசனில் ஆடுவதைப் பார்க்கும்போது எதுவும் நடக்கலாம் என்றே தோன்றுகிறது.

மறுமுனையில் ப்ளேஆஃப் வாய்ப்பை மெல்லிய கயிறு கொண்டு அதுவும் ஒரே ஒருவிரலால் பற்றியபடி தொங்கிக்கொண்டிருக்கிறது சன்ரைஸர்ஸ். லீக்கின் கடைசி ஆட்டத்தை ஆடப்போவது இந்த அணிதான். அதற்கு முன்னரே ப்ளேஆஃப்பிற்குச் செல்லப்போவது யார் என உறுதியாகத் தெரிந்துவிடத்தான் வாய்ப்புகள் அதிகம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.