அடுத்த 5 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி 50 சதவீதமாக உயரும்- அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர்:

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜ் தினசரி காய்கறி மார்க்கெட்டில் 75 ஆண்டு பழமையான கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:

1947ல் தொடங்கப்பட்ட காமராஜ் தினசரி காய்கறி மார்க்கெட் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகள் ரூ.6 கோடியே 75 லட்சம் மதிப்பில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள வளாகத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் பணிகள் தொடங்கப்பட்டு ஒன்றரை வருடத்தில் பணிகள் முடிக்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் 2.0 திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீத விழுக்காடு என்ற நிலையை எட்டும். அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின் உற்பத்தி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது. தொழிற்சாலைகளில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அறிவிக்கப்படவில்லை. 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி கொள்முதல் செய்ய ஆர்டர் போடப்பட்டது. 137 டாலருக்கு தனியாருக்கு பணி ஆணை கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டே முன்கூட்டியே 137 டாலருக்கு தனியாருக்கு பணி ஆணை கொடுக்கப்பட்டது.

காற்றாலைகளில் மின் வினியோகம் வீணடிக்கப்பட்டுள்ளதாக பா.ம.க. சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு மழையின் காரணமாக மின் நுகர்வு குறைந்துள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே காற்றாலைகளில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. மின் வினியோகம் சமநிலையில் இருப்பதற்காக அவ்வாறு எடுக்கப்படுகிறது.

இது பாட்டாளி மக்கள் கட்சி தலைவருக்கும் தெரியும். மற்ற மாநிலங்களுக்கும் நமது உபரி மின்சாரத்தை வழங்கக்கூடிய பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.