சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது
இதையடுத்து தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும், வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக பேரறிவாளன் தெரிவித்தார்.
அதன்படி நேற்று சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தமது தாயாருடன் சென்று நேரில் சந்தித்த பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.
பேரறிவாளன் சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளனை சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன்.
சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு தமது தாயாருடன் சென்று பேரறிவாளன் சந்தித்தார். அப்போது இருவரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நன்றி தெரிவித்தனர்
தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பேரறிவாளன் சந்தித்தார். அவரது தாயார் அற்புதம்மாளும் உடன் இருந்தார்.
அப்போது தமது விடுதலைக்காக அதிமுக எடுத்து நடவடிக்கைகளுக்காக பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம்மாளும் நன்றித் தெரிவித்துக் கொண்டனர்.