அனைத்து ஹீரோ படங்களும் வெளியாகும் ஆண்டாக 2022 அமையுமா?

கொரானோ தொற்றால் கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் பல தொழில்கள் பாதிக்கப்பட்டது. அவற்றில் திரைத் துறை கடுமையாகவே பாதிக்கப்பட்டது. தமிழ் சினிமாவிலும் கடந்த இரண்டு வருடங்களாக கடும் போராட்டத்தை சந்தித்தனர். தியேட்டர்கள் மூடல், 50 சதவீத அனுமதி, ஓடிடி வெளியீடுகள் என திரையுலகம் கடும் நெருக்கடிகளை சந்தித்தது.

2022ம் ஆண்டின் ஆரம்பமும் கொரானோ மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக மீண்டது. இந்த வருடத்தில் தமிழில் உள்ள முன்னணி ஹீரோக்கள் படங்கள் அனைத்தும் வெளியாகும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.

அஜித் நடித்த 'வலிமை', விஜய் நடித்த 'பீஸ்ட்', விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்', விஜய் சேதுபதி நடித்த 'கடைசி விவசாயி, காத்துவாக்குல ரெண்டு காதல்', சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்', சிவகார்த்திகேயன் நடித்த 'டான்', ஆகிய படங்கள் தியேட்டர்களிலும் விக்ரம் நடித்த 'மகான்', தனுஷ் நடித்த 'மாறன்' ஆகிய படங்கள் ஓடிடி தளங்களிலும் வெளியாகின.

அடுத்து கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்', கார்த்தி நடிக்கும் 'சர்தார்', விஷால் நடிக்கும் 'லத்தி', ஆர்யா நடிக்கும் 'கேப்டன்', சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' உள்ளிட்ட படங்களுடன் மேலே சொன்ன நடிகர்கள் சிலரின் வேறு சில படங்களும் இந்த ஆண்டில் வெளியாக உள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி நடிக்கும் 'பொன்னியின் செல்வன்' படமும் இந்த ஆண்டு வெளியீடுதான். இவற்றோடு ரஜினிகாந்த் நடிக்க உள்ள அவரது 169வது படமும் இந்த ஆண்டாக வந்தால் தமிழ் சினிமாவில் இது முக்கியமான ஒரு ஆண்டாக அமையும். ஆனால், ரஜினியின் படம் இன்னும் ஆரம்பமாகவே இல்லை. அப்படியே ஆரம்பமானாலும் இந்த ஆண்டு வெளியிடுவார்களா என்பது சந்தேகம்தான். அடுத்த வருட பொங்கலுக்கு வேண்டுமானால் வெளியாகலாம். அப்படி நடந்தால் ரஜினிகாந்த் தவிர மற்ற முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியான ஆண்டாக இந்த 2022 அமையும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.