வாஷிங்டன்: அமெரிக்க நாட்டில் 118 லிட்டர் தாய்ப்பாலை பச்சிளம் குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார் அலிசா சிட்டி என்ற பெண். அந்த நாட்டில் பால் பவுடருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாட்டில் குழந்தைகளுக்கு உணவாக கொடுக்கப்பட்டு வரும் பால் பவுடருக்கு (பேபி பார்முலா) கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த நாட்டில் பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், களத்தில் இறங்கியுள்ளார் அலிசா.
முதலில் தனது தாய்ப்பாலை தாய்ப்பால் வங்கி மூலம் இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளார் அவர். இருந்தாலும் மருத்துவ பரிசோதனை போன்றவற்றால் அதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதால் அதனை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் இருந்துள்ளது. அதனால் ஒரு அவுன்ஸ் தாய்ப்பாலை ஒரு அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டார். அவருக்கு அதிகப்படியான பால் சுரப்பதே இதற்கு காரணம் என தெரிகிறது. இதற்காக சுமார் 118 லிட்டர் பாலை அவர் ஃப்ரீஸரில் வைத்து பதப்படுத்தி வைத்துள்ளார்.
ஆன்லைன் மூலம் தாய்ப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார் அலிசா. தாய்மார்களுடன் பேசி அவர்களது நிலையை அறிந்து கொண்டு 1 டாலருக்கு குறைவாகவும் தாய்ப்பாலை கொடுக்க தயார் என தெரிவித்துள்ளார் அலிசா. அமெரிக்காவில் தாய்ப்பால் விற்பனை செய்வதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை. இருந்தாலும் அதன் தன்மையை அறிய மருத்துவ பரிசோதனை செய்வது அங்கு அவசியமாக உள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவக் கூடாது என்பதற்காக இந்த நடைமுறை அங்கு பின்பற்றப்படுகிறது.