இதயத்தில் கத்திக் குத்து காயத்தால் உயிருக்குப் போராடிய இளைஞரை காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

கோவை: இதயத்தில் கத்திக் குத்து காயத்தால் உயிருக்குப் போராடிய இளைஞருக்கு இரண்டு மணி நேரம் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டு கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (26). அடிதடியில் கத்தி குத்துபட்டு நெஞ்சில் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் இதயத்தில் காயங்களும், இதயத்தை சுற்றி ரத்தம் உறைந்த நிலையில் கட்டியாக மாறி, இடது பக்க இதயத்தை அழுத்தி அதன் வேலைபாட்டை குறைத்து இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, சுமார் இரண்டு மணி நேரம் அவசர இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவரது உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினர்.

இதுதொடர்பாக மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியது: “அறுவை சிகிச்சையின்போது மணிகண்டனின் வலது பக்க இதயத்தில் குத்து காயம் இருந்தது. அதிலிருந்து ரத்தம் கசிந்துகொண்டு இருந்தது. மேலும் இதயத்தை சுற்றிலும் ரத்தம் கசிந்ததினால் ஏற்பட்ட ரத்தக் கட்டு (சுமார் ஒரு லிட்டர்) இதயத்தை அழுத்திக் கொண்டு இருந்தது. இதனால் இதயத்தின் செயல்பாடு குறைந்து இருந்தது. அதை சரி செய்யும் வகையில் அவசர சிகிச்சை பிரிவு தலைவர் கருப்பசாமி, இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் சீனிவாசன், உதவி பேராசிரியர்கள் இளவரசன், முகமத் மின்னதுல்லாஹ், அரவிந்த், மயக்கவியல் துறை தலைவர் கல்யாண சுந்தரம், உதவி பேராசிரியர் மதன கோபாலன், செவிலியர் பொற்கொடி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் ரத்த கட்டை அகற்றி, காயத்தால் ரத்தம் கசிந்துகொண்டு இருந்த இதய பகுதியையும் தையல் போட்டு சரி செய்தனர்.

அதிகமான ரத்தக் கசிவு ஏற்பட்டதால் சிறுநீரகத்துக்கு செல்ல வேண்டிய ரத்தம் குறைவாக இருந்தது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இந்த சிறுநீரக பாதிப்பிற்கும் சிறுநீரகவியல் துறை தலைவர் பிரபாகரன் தலைமையில் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, மணிகண்டன் நாளை (மே 19) வீடு திரும்ப உள்ளார்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.